தமிழர்கள் முன்னேற அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும்

இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரங்களைக் கையிலெடுத்து, ஒருபடி முன்னேற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தமிழ்த்jதேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். Cபுல்லுக்குளம் பகுதியில் தனியார் பஸ்தரிப்பிட கண்காணிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளையும் இணைத்து உரிய திட்டங்களை அமுல்படுத்தும் நடவடிக்கை இம்முறை உரிய முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தல் நடத்தப்பட்டு, யாழ்.மாநகர சபை முதல்வரும், சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ள இவ்வேளையில், மாநகர சபை தொடர்பான விடயங்களிலும், பங்களிப்பு செய்வது மகிழ்ச்சியைத் தருகின்றது.

வடமாகாண ஆளுநர் தன்னுடைய உரையில் தான் அரசியல்வாதி இல்லை என்ற காரணத்தினால், சில கருத்துக்களைக் கூற முடியுமெனக் கூறி, பலமான அரசியல் கருத்துக்களை கூறிச் சென்றுள்ளார். தான் அரசியல்வாதி இல்லை எனக் கூறிவிட்டு எல்லா அரசியல் கருத்துக்களையும் கூறப்போகிறார் போல் தெரிகிறது.

நானும், அமைச்சர் சம்பிக்கவும் இரு திசையிலிருந்து வானூர்தியில் ஒரு திசைக்கு வந்ததாக வடமாகாண ஆளுநர் கூறினார். ஆம், நாங்கள் பயணித்த திசை யாழ்ப்பாணத்தை நோக்கியதாகத் தான் இருந்தது.

நாங்கள் பயணித்த திசையில் தவறு கிடையாது, மக்களை மேம்படுத்த வேண்டும். அது பௌதீக அபிவிருத்தி சார்ந்ததாக இருக்காது. ஏனெனில், இந்தப் புதிய பயணத்தை ஆரம்பித்தது இன்றல்ல.

2015ஆம் ஆண்டு முதல் நாம் ஒன்றாக பயணித்தவர்கள், புதிய அரசியலமைப்பு பணிகளுக்கென உருவாக்கப்பட்ட வழிநடத்தல் குழுவிலே, நானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் மூன்றரை வருடங்களாக செயற்பட்டு வருகின்றோம்.

அதில் தற்போது, ஒருபடி மேல் நிலைக்கு வந்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் என்னவாகுமென்ற சந்தேகம் இருந்தாலும், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தற்போதுஇரண்டாவது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இன்னும் சற்றுத் தூரம் எங்களுடன் பயணிக்க வேண்டும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எவ்வாறு ஒன்றாக வாழ விரும்புகின்றார்கள் என்பதைக் காண வேண்டும், அவ்வாறு ஒன்றாக வாழும்போது, எமது கைகளில் ஆட்சி அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

அது நியாயமான அரசியல் அபிலாசை என்பதை நீங்களும் இணைந்து எங்களுடன் கைகோர்த்து அந்தப் பணியில் தமிழ் மக்கள் வெற்றி பெறுவதற்கு, இந்தப் பாராளுமன்ற காலத்தில் தமிழ் மக்கள் ஓரடியையேனும் எடுத்து வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்றும் சுமந்திரன் எம்பி வேண்டுகோள்விடுத்தார்.

Related posts