காலி, ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்திலிருந்து கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் அடித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் காட்டுப்பகுதியில் தீமூட்டி எரிக்கப்பட்டிருப்பது சிஐடி விசாரணைகளிலிருந்து அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து தென் மாகாணத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மாஅதிபரினால் மேல் மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொனாமுல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மிகவும் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அச்சடலங்கள் வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகங்கொட காட்டுப் பகுதியில் வைத்து எரிக்கப்பட்டிருப்பதாகவும் சிஐடி விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகரான ஹேவெஸ்ஸ கமகே விராஜ் மதுசங்க (26) என்பவர் நேற்று முன்தினம் (21) சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார்.
விசாரணைகளின்போது இந்த உப பொலிஸ் பரிசோதகர் வழங்கிய வாக்குமூலத்துக்கமையவே இத்தகவல்கள் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து சிஐடியினர் காலி நீதவானுடன் கொனாமுல்ல பகுதியில் வர்த்தகர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட வீட்டையும் வலஸ்முல்ல நீதவானுடன் மெதங்கொட காட்டு பகுதியையும் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
அத்துடன் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் மற்றும் மாத்தறை சட்ட வைத்திய அதிகாரியும் நேற்று சடலங்கள் எரிக்கப்பட்ட பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பூஸ்ஸ ரத்ன உதாகம பிரதேசத்தைச் சேர்ந்த ரசின் சிந்தக (37) மற்றும் மஞ்சுள அசேல (33) ஆகிய வர்த்தகர்கள் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி முதல் காணாமற் போயிருப்பதாக அவர்களது குடும்பத்தார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
விசாரணைக்கென கூறி பொலிஸ் சீருடை அணிந்த சிலரால் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வர்த்தகர்களும் இதுவரை வீடு திரும்பவில்லையென்றும் குடும்பத்தார் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் கடந்த 13 ஆம் திகதி சிஐடி யினருக்கு விசேட பணிப்புரை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்த சிஐடி சுமார் ஒரு வார காலத்துக்குள் இச்சம்பவத்தின் பின்னணியை கண்டறிந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கப்பில நிஷாந்த கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.