திரைப்படம் : எல்.கே.ஜி
நடிகர்கள் : ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், மயில்சாமி, ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், ராம்குமார்
கதை, திரைக்கதை, வசனம் : ஆர்.ஜே. பாலாஜி
இசை : லியேன் ஜேம்ஸ்
இயக்கம் : கே.ஆர். பிரபு.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலை, தேர்தலை மையமாக வைத்து அல்லது கேலி செய்து படங்கள் வருவது ரொம்பவும் குறைந்துபோயிருக்கும் சூழலில் வெளியாகியிருக்கிறது எல்.கே.ஜி.
சாதாரண மாநகராட்சி உறுப்பினராக இருக்கும் ஓர் இளைஞன் என்னென்ன தகிடுதத்தங்களைச் செய்து முதலமைச்சராகிறான் என்பதுதான் படத்தின் “ஒன்லைன்”.
லால்குடி கருப்பைய்யா காந்தி (ஆர்.ஜே. பாலாஜி) ஒரு மாநகராட்சி உறுப்பினர். தன் தந்தையைப் (நாஞ்சில் சம்பத்) போல தோற்றுப்போன அரசியல்வாதியாகிவிடக்கூடாது என்பதற்காக சிறு வயதிலேயே மிகப் பெரிய லட்சியங்களுடன் செயல்பட்டு வருபவர்.
அந்தத் தருணத்தில் தமிழகத்தின் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்கும் போஜராஜன் (ராம்குமார்) எல்.கே.ஜிக்கு முதல்வரின் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைக் கொடுக்கிறார்.
ஆனால், அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, முதல்வர் பதவியைக் கைப்பற்ற நினைக்கிறார் அதே கட்சியைச் சேர்ந்த ரித்தீஷ். இதனால், வெற்றிக்கான தன் தேர்தல் வியூகங்களை வகுக்க தனியார் நிறுவனம் ஒன்றையும் பணியில் அமர்த்துகிறார்.
பிறகு, அந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்று எல்.கே.ஜி. எப்படி முதல்வராகிறார் என்பது மீதிக் கதை.
1980களின் பிற்பகுதியில் எம்.ஜி.ஆர். இறந்த பிறகு தமிழ்நாட்டில் நிலவிய குழப்பம் தமிழ் சினிமாவின் பல படங்களில் விமர்சிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகர்களான எஸ்.எஸ். சந்திரன், சோ போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் அதைச் செய்துகொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலில் அதனைக் கேலிசெய்வதற்கும் விமர்சிப்பதற்கும் ஏகப்பட்ட வாய்ப்புகள் உண்டு. இந்தப் படமும் அப்படித்தான் துவங்குகிறது.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவது, அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே தங்குவது, பேட்டி கொடுப்பது என நகர்ந்தாலும், அவற்றில் கேலியோ, விமர்சனமோ இன்றி, நடந்த சம்பவங்களையே திரும்பவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தக் காட்சிகள் சிறிய புன்னகையை வரவழைக்கின்றனவே தவிர, பெரிய சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு காட்சியில் கதாநாயகனும் வில்லனும் பேசிக்கொள்கிறார்கள்.
“கதாநாயகன்: 1967ல் காமராஜரையே தோற்கடிச்ச ஊரு சார் இது..
வில்லன்: காமராஜரைத் தோற்கடிச்ச எம்.எல்.ஏ பேரைச் சொல்லு.. தெரியலை?. ஆனா, காமராஜர் பேர் இன்னைக்கும் இருக்கு.”
இந்தக் காட்சியில் இருக்கும் அரசியல் புரிதலும் தொனியும்தான் படத்தின் அடிப்படையான தொனி. ‘காமராஜர் நல்லவர்; அவரைத் தோற்கடித்துவிட்டார்கள்’, ‘மக்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுகிறார்கள்; அதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்’, ‘சமூகவலைதளங்களின் மூலம் மக்களின் மனதை மாற்றிவிடலாம்’, ‘பகுத்தறிவு பேசுபவர்கள் வெளியில் பெரியார் படத்தை வைத்துக்கொண்டிருப்பார்கள், ஆனால், வீட்டிற்குள் கடவுளை வணங்குவார்கள்’ – இப்படி எளிமையான அரசியல் நம்பிக்கைகளுடன் படம் நகர்வதால், பல காட்சிகள் சொதப்பல்.
படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கும் காட்சி ஒன்று வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்பை தொலைக்காட்சியில் பார்த்திருந்தால்கூட இவ்வளவு அபத்தமான ஒரு காட்சியை வைத்திருக்க முடியாது.
படம் எப்படியிருந்தாலும் கதாநாயகனாக வரும் ஆர்.ஜே. பாலாஜிக்கு இந்தப் படம் ஒரு நல்ல ‘ப்ரேக்’. நிறைய இடங்களில் அவர் கத்துவது காதைக் கிழிக்கிறது என்றாலும் படம் முழுக்க பெரும் எனர்ஜியுடன் வருகிறார்.
இவரைவிட்டுவிட்டால், ப்ரியா ஆனந்த், மயில்சாமி, நாஞ்சில் சம்பத், ஜே.கே. ரித்தீஷ் ஆகியோர் தொட்டுக்கொள்ள ஊறுகாயைப் போலத்தான் வருகிறார்கள். ரித்தீஷ் வரும் காட்சிகளில் மட்டும் அவருக்கு சற்று இடம் கொடுத்திருக்கிறார்கள்.
லியேன் ஜேம்ஸின் பின்னணி இசையைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால், “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?” பாடலின் ரீ – மிக்ஸ் மனதில் நிற்கிறது.
படம் முடியும்போது, ஒரு முழு நீள அரசியல் திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்தாமல், யு டியூபில் அரசியல் நையாண்டி ஷோ ஒன்றை பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது படம்.
அரசியல் ஸ்பூஃப் அல்லது அரசியல் காமெடி அல்லது அரசியலை கடுமையாக விமர்சித்து உருவான படம் என எந்த வரையறைக்குள்ளும் பொருந்தாமல் குழப்பும் இந்தப் படம், மேலோட்டமாக அரசியலை கவனிக்கும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்.