மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள அவரது சமாதியில் அரசியல் கட்சித் தலைவர்கள் அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகன் ஜெயலலிதா நினைவாக அவரது சமாதியில் 6 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்த புதுமண தம்பதிகள் அவரது சமாதியில் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்கள் குறித்து விசாரித்தபோது சென்னை 63-வது வட்ட அதிமுக பொருளாளரின் மகன், ஜெயதேவன் என்பது அவர் பெயர். 1990-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ஜெயலலிதாவிடம் குழந்தையாக இருந்த தன்னை, தனது தந்தை, ஜெயலலிதாவிடம் கொடுத்து பெயர் வைக்க கேட்டுக்கொண்டதாகவும் தனக்கு ஜெயதேவன் என்று ஜெயலலிதா பெயர் வைத்ததாகவும் மணமகன் தெரிவித்தார்.
தனக்கு பெயர் வைத்த, தங்கள் குடும்பத்தினர் விரும்பும் தலைவி ஜெயலலிதாவின் முன்னிலையில் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அவர் மறைந்தாலும் அவரது சமாதியில் அவரது பிறந்த நாளான திருமணம் செய்வது அவரே நேரில் தன்னை வாழ்த்துவது போல் உள்ளதாகவும் மணமகன் தெரிவித்துள்ளார்.
ஜெயதேவன் சுவாதி திருமணம் அவரது பெற்றோர்கள் ஆசியுடன் ஜெயலலிதா சமாதியில் இன்று நடந்தது. ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தொண்டர்கள் அவரை இன்றும் நினைவு கூர்ந்து தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை அவரது நினைவிடத்தில் நடத்துவது அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.