தேவ ஆலோசனை! கடவுளின் பகைமையில் இருந்து தப்புவது எப்படி?
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். எண்ணாகமம் 21:8.
மானிடவாழ்வு என்பது ஓர் நீண்ட நெடுந்தூர பயணமாகும். இந்த நெடுந்தூரப் பயணத்தில் பலவகையான அனுபவங்களை நாம் சந்திக்க வேண்டிவரும். அதுமட்டு மல்லாமல் மனிதகுலம் சந்தித்தும் இருக்கிறது. இந்த சந்திப்புக்களினால் பலர் கடவுளுடன் பகைமையை குரோதத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.அவ்வாறு குரோதத்தை ஏற்படுத்திய மக்கள் எப்படியாக மீண்டும் தேவனுடைய கிருபையை, தயவை அடைந்தனர் என்பதை நாம் அறிந்து, எமது வாழ்வில் இழந்துபோன தேவ கிருபையை அடைந்துகொள்ள இந்த நற்சிந்தனையூடாக உங்கள் யாவரையும் அழைத்துச் செல்கிறேன்.
மானிட வாழ்வைப்பற்றிய கவிதை ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. பையூரிலிருந்து பொய்யூருக்கு வந்து பொய்யூரிலிருந்து மெய்யூருக்கு பிரயாணம் என்று. அதாவது கருப்பையில் இருந்து மாயையான இந்த உலகிற்கு வந்து, மாயையான இந்த உலகத்திலிருந்து மெய்யூராகிய இறைவனிடம் பிரயாணிப்பது என்பது அர்த்தமாகும்.
இந்த உண்மையை அறிந்து சிந்திக்க எண்ணாகமம் 21:7-9 வரை வாசிப்போம். நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம். சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றார்கள், மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச்செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் து}க்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் து}க்கி வைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான். (வேதப்புத்தகம் உள்ளவர்கள் 1-9 வரை வாசிக்கவும்).
எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டுக்கொண்டுவரப்பட்ட இஸ்ரவேலர்கள் வழிநெடுக தேவனுடைய நோக்கத்தையும் திட்டத்தையும் புரிந்து கொள்ளாமல் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்துக்கொண்டு வந்தார்கள். அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து, என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். யாத்திராகமம் 15:24. இறைச்சிக்காக முறுமுறுத்தார்கள் யாத்.16:1-8. அடிமைவாழ்வின் உணவுகளை நினைத்து முறுமுறுத்தார்கள். எண்.11:1-5. முறுமுறுப்பு நமது தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானது. (அதனுடைய அர்த்தம் தேவனின் அன்பை, வழிநடத்தலை, நோக்கத்தை நினைத்து வாழ விரும்பவில்லை என்பதாகும்). இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பை தாங்கிக்கொள்ள முடியாத கர்த்தர் தண்டனையாக கொள்ளிவால் சர்ப்பங்களை அவர்களிடம் அனுப்பினார். இதனை ஆங்கிலத்தில் (பயர் சினேக்) தீ கக்கும் பாம்புகள் என அழைப்பர். இப்பொழுது சில ஆங்கில படங்களில் இவ்வாறான பாம்புகளை காட்டுவார்கள். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மிகக்கொடியதும் பயங்கரமானதுமாகும்.
இந்த வேதனையின்போது மக்கள் தேவனை நோக்கி தங்களை காப்பாற்றும் படியாக மன்றாடினர். வேண்டிக்கொண்டனர். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய், நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ் செய்தோம். சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள், மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயைநோக்கி, நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத் தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் து}க்கிவை, கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். எண்ணாகமம் 21:7-8.
இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தபோது, அன்று நடந்த அந்த சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தி தமது சிலுவை மரணத்தின்மூலம் தாம் உலகிற்கு கொடுக்கும் நித்திய ஜீவனைக்குறித்து இவ்வாறு கூறினார். சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிகிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் என்றார், யோவான் 3:14-15.
யார்யார் மேசேயின் வார்த்தையைக்கேட்டு கீழ்படிந்தார்களோ அவர்கள் அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர். அதேபோல இன்று இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்போது பாவம் என்கிற கொடிய விஷத்தில் இருந்து விடுதலை அடைந்து தேவனுடன் வாழும் நித்தியவாழ்வை அடையமுடியும். நான் ஜீவன் உண்டா யிருக்கவும், அந்த ஜீவன் பரிப10ரணப்படவும் வந்தேன் என்றார். யோவான் 10:10.
அன்று தேவஆலோசனை, பாம்பினால் தீண்டப்பட்டவர்கர்கள் வெண்கலசர்ப்பமாகிய பாம்பை நோக்கிப்பார்க்க வேண்டும் என்று இருந்தது. இன்று தேவன் கொடுக்கும் ஆலோசனை மிகஎளிதானது. சிலுவையில் மரித்த இயேசுவை நோக்கிப் பார்க்கும் படியாக. ப10மியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்பதாகும். ஏசாயா 45:22.
இன்றுமக்கள் தங்கள் மனக்கண்களை குருடாக்கிக்கொண்டு போலியானவைகளை நம்பியும் நாடியும் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களை அடிமைப்படுத்தி அகப்படுத்திக் கொள்கிறார்கள். ஒருசில வருடங்களுக்கு முன்னர் இதேபத்திரிகையில் வந்த ஓர் கட்டுரையில் (சிந்தளைகள்) குறிப்பிட்டதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். சாக்குக்குள் இருந்த கரடியை பொதி என்று எடுக்கப் போய் தன்னை மாட்டிக்கொண்ட மனிதனைக் குறித்ததாகும்.
அதேபோன்றுதான் மக்கள் இன்று தங்களை மாட்டிக்கொள்கிறார்கள். தங்களை இவ்வாறு சிறைப்படுத்திக்கொண்ட மக்களுக்கு தேவன் தரும் நற்செய்தி, இயேசுவை நோக்கிப்பார்ப்பதன் மூலம் வாழ்க்கையில் பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை யையும் தேவனுடன் வாழும் வாழ்க்கையாகிய நித்திய ஜீவனையும் அடையமுடியும் என்று. அந்த வாழ்க்கையை அடைய என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புவி.
அன்பும் இரக்கமும் உள்ள நல்லபிதாவே, நான் எனது பாவங்களுக்கு தண்டனை பெறாமல், உமது குமாரனாகிய இயேசுமூலம் எனக்கான தண்டனையை செலுத்தி, என்னை மீட்டுக்கொண்டதற்காக உமக்கு நன்றி அப்பா. அந்த விடுதலையை நான் காத்துநடக்க எனக்கு உதவி செய்து காத்துக்கொளளும். உலக மாயைகளுக்குள் அகப்பட்டு உம்மிடம் இருந்து பெற்ற நித்தியஜீவனை நான் இழந்து போகாதவனாக வாழ என்னைக்காத்து வழிநடத்தும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்லபிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonipillai. Rehoboth Ministries – Praying for Denmark