குழந்தைகளைத் தங்களின் பாலியல் இச்சைக்கு உட்படுத்தும் பாதிரியார்கள் சாத்தானின் கருவிகள் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய போப், ”குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது மனித பலிக்குச் சமமானது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் பாதிரியார்களால் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு பாலியல் வன்முறைக்கும் சரியாகப் பாடம் கற்பிக்கப்படும்.
இது தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட தேவாலயங்கள், ஏற்கெனவே பிரச்சினையில் சிக்கியிருந்தால் தீவிர கவனம் கொடுத்து விசாரிக்கப்படும்.
முன்னொரு காலத்தில் சில கலாச்சாரங்களில் கொடூரமான மத நடைமுறைகள் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சில சடங்குகளில் மனிதர்கள் பலி கொடுக்கப்படுவர். குழந்தைகளை பலி கொடுக்கும் நிகழ்வுகளும் இருந்தன.
குழந்தைகள் மீதான வன்முறை என்பது சமூகத்தின் அனைத்துக் கலாச்சாராங்களிலும் பெரும்பான்மையாகப் பரவியிருக்கிறது. இதில் காவலர்களாக இருக்க வேண்டிய பாதிரியார்களே குழந்தைகளுக்கு எதிரானவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் சாத்தானின் கருவிகள்.இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் போப் பிரான்சிஸ்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பி வரும்போது பிஷப்புகளும் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது உண்மைதான் என போப் பிரான்சிஸ் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.