மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதை ஒட்டி கமலுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு கமல் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவையொட்டி தமிழகத்தில் நேற்று (பிப்.24) பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் கமல்ஹாசன் சிறப்புரை ஆற்றினார். ஓராண்டு நிறைவையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகில் கமலுக்கு நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் ஓராண்டு நிறைவையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல் முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்…என் நண்பர் கமல்ஹாசன், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என்று நேற்றிரவு (பிப்.24) ட்வீட் செய்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் “நன்றி ரஜினிகாந்த். என் 40 ஆண்டு கால நண்பரே, நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே.” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியும் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இதற்காக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என பலரையும் சந்தித்துப் பேசி வருகிறார். அரசியலில் தன் நண்பரைப் போட்டியாகக் கருதாமல் ரஜினி வாழ்த்தியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.