அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.
இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.
இதனிடையே அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ”அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார்” என்று அறிவித்துள்ளார்.
இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.