இன்று விடுதலை ஆகும் அபிநந்தன் தாயகம் திரும்பிய பின் என்ன வகையான அலுவல் நடைமுறை இருக்கும்?
இதுபோன்ற சம்பவத்தில் அபிநந்தனை விடுவித்துள்ளார்கள் அல்லவா? அவர் விடுவிக்கப்பட்டவுடன் அவரை அவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அழைத்துச் சென்று விசாரணை நடத்துவார்கள். அதை டீ-ப்ரீசிங் என்பார்கள். அங்கு என்ன பேசப்பட்டது, என்ன நடந்தது? என்ன வகையான கேள்விகள் கேட்டார்கள், என்ன பதில் சொன்னீர்கள், ஆஃப் த ரெக்கார்டாக நடந்த விஷயங்கள், என்னென்ன நான் சொன்னேன் எதைச் சொல்லவில்லை என்பது போன்ற நடந்த விஷயங்களை அவர் நினைவுபடுத்தி விரிவாகக் கூறிவிடுவார். அதை ஒரு ரிப்போர்ட்டாகக் கொடுத்து விடுவார்.
கொடுத்தவுடன் அதை மேலதிகாரிகள் ஆராய்ந்து பார்ப்பார்கள். அவரை அறியாமல் ஏதாவது தகவல்களைக் கூறியுள்ளாரா? என்பதை ஆராய்ந்து பார்ப்பார்கள். அதன் பின்னர் அவருக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் இருந்தால் அதை சரி செய்துகொள்வதற்காக அவரது மனதை இலகுவாக்கும் முயற்சிக்கு அனுமதிப்பார்கள்.
அது எப்படிப்பட்டதாக இருக்கும்?
உளவியல் ரீதியாக அவரது மன நிலை, அழுத்தத்தை சரிசெய்ய வாய்ப்பு தருவார்கள். யூனிட்டிலேயே இருக்கலாம், அவரது குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க 2, 3 நாட்கள் செலவழித்துவிட்டு வரச்சொல்வார்கள் அல்லது அவரை யூனிட்டிலேயே வைத்துவிட்டு அவரது குடும்பத்தாரை அங்கு வரவழைத்து அவர்களுடன் இயல்பான மனநிலையில் நேரத்தைச் செலவிடும் வகையில் வாய்ப்பு தருவார்கள். இதன்மூலம் இயல்பான மன நிலைக்கு அவர் திரும்பியவுடன் அவரது பணிக்கு அபிநந்தன் திரும்புவார்.
ஒருவாரம் அவரது யூனிட்டிலேயே உள்காவல் போன்று யூனிட்டிலேயே வைப்பார்கள் என கூறுகிறார்களே?
அது இதில் வராது. இவரைக் கைது செய்தது உலகமே கவனித்தது. உலகின் பார்வை அவர் மீது இருந்தது அல்லவா? அதனால் அபிநந்தனை துன்புறுத்தவோ, மனரீதியாக மாற்றவோ வாய்ப்பில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் நடைமுறை எப்போது தேவைப்படும் தெரியுமா? பல மாதங்கள் யுத்த கைதியாக அடைக்கப்பட்ட ஒருவரை அந்த நாட்டு ராணுவம் மூளைச்சலவை செய்யும். நாங்கள் ஏன் இவ்வாறு செய்கிறோம் தெரியுமா? உங்கள் ஆட்கள் செய்வது தவறு என கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை செய்திருப்பார்கள்.
அவர்களுடைய கொள்கையைத் திணிக்க முயல்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் விடுவிக்கப்படும் ஒரு வீரர் மனநிலையில் மாற்றம் குழப்பம் இருக்கும். அப்படிப்பட்டவரை நீங்கள் சொல்வதுபோன்று ஒருவாரம்வரை இம்ப்ரிசனாக (imprison) வைத்து அந்த வீரர் மனநிலையை ஆய்வு செய்வார்கள். டீ-ப்ரீசிங் என அவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உளவியல் நிபுணர்கள் முயல்வார்கள். ஆனால் அபிநந்தன் இரண்டு மூன்று நாளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இது பொருந்தாது.
ஆகவே அபிநந்தனுக்கு அதிகபட்சம் 2 அல்லது மூன்று நாட்கள் விசாரணை நடத்திவிட்டு குடும்பத்தாருடன், நண்பர்களுடன் செல்ல அனுமதிக்கப்படுவார். பின்னர் அவர் இயல்பான அவரது முந்தைய பணிக்கு அனுமதிக்கப்படுவார்.
அவரது முந்தைய விமானப்படை பணியிடமான காஷ்மீருக்கு அனுப்புவார்களா?
தாராளமாக அனுப்புவார்கள். அதில் எந்தத் தடையும் இல்லை. நான் அந்தப்பணிக்குச் செல்ல விரும்பவில்லை என்று அபிநந்தன் தெரிவித்தால் மட்டுமே வேறு பணிக்கு அனுப்புவார்கள்.
அபிநந்தன் இயக்கிய போர் விமானம் வீழ்த்தப்பட்டதற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
இல்லை, இது சாதாரணமான, இயற்கையான நஷ்டம். இதற்காக தனிப்பட்டவர்கள் மீது எவ்வித பழி போடுவதோ, கஷ்டப்படுத்துவதோ நடக்காது. சாதாரணமாக போரில் விமானம், கப்பல் போன்றவை நஷ்டப்படும். போரில், இதுபோன்ற நடவடிக்கைகளில் நடக்கும் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்று.
சேதமுற்ற விமானத்தைச் சரி செய்ய முயற்சிப்பார்கள். முற்றிலும் அழிந்துபோனால் அதைப் பதிவில் இருந்து நீக்கிவிடுவார்கள். ரைட் ஆஃப் என அதை அழைப்பார்கள். உதாரணத்திற்கு 60 விமானங்கள் உள்ளன. அதில் மூன்று விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்றால் 3 விமானங்களை ரைட் ஆஃப் செய்து ரெஜிஸ்டரிலிருந்து நீக்கி விடுவார்கள். அதற்குப் பதிலாக 3 விமானங்களை மேலே கேட்டு வாங்க முயல்வார்கள்.
தற்போது அபிநந்தன் மீடியாக்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுவாரா?
கண்டிப்பாக அனுமதிக்கப்படுவார். தற்போது அவர் யூனிட்டுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள இண்டலிஜென்ட் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை முடிந்த பின்னர், அவர் மீடியாக்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். அவர் என்ன நடந்தது என்ன பேசினோம், எப்படி நடத்தப்பட்டோம் என அனுமதிக்கப்பட்ட விவரங்களை மீடியா முன் தெரியப்படுத்த அனுமதிக்கப்படுவார்.
இவ்வாறு தயாளன் அழகர் ராஜன் தெரிவித்தார்.