ஜெனீவா புறப்படுகிறார் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றம் வருமா..?

ஆண்டுக்கு ஒருக்கா வருகுதப்பா நமக்கு ஐந்தாறு மிட்டாய் கிடைக்குதப்பா என்று வருடம் தோறும் ஜெனீவாவில் ஒரு மனித உரிமைக்கூட்டம் நடக்கும் இலங்கை தமிழ் ஊடகங்களில் அது பெரும் செய்தியாகும்.

பின்னர் மறுபடியும் முடியும்.. ஆனால் அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர் கூறியது போல ( அவருக்கும் எழுதி கொடுக்கப்பட்டதுதான்) பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்த தாய் அதே புகைப்படங்களுடன் கண்ணீருடன் நிற்கும் புகைப்படம் வருடா வருடம் தொடரும்…

இதற்கு சரியான பதில் ஒன்றை சென்ற வாரம் ரணில் கூறியிருந்தார்.. விடுதலைப் புலிகளும் சிறீலங்கா இராணுவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று.. அதற்கு பத்தாண்டு வேண்டும் என்று..

மக்களை மறக்கச் செய்து கைகழுவுவதே மனித உரிமைகள் கழகத்தின் வேலை என்பதை அவர் உரையில் காணலாம். தமிழ் தலைமைகள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஜெனீவா நாடகம் ஆடுகின்றன என்பதை யாழ்ப்பாணத்தில் கண்ணீருடன் நிற்கும் தாய்க்கு விளக்கத்தான் முடியுமா.. முடியாது..

இதற்கிடையில் இன்று வெளியாகிய செய்திகளில் முக்கியம் பிடிப்பது முன்னால் வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமாக திரு. சி.வி.விக்னேஸ்வரன் வரும் 20ம் திகதி நடைபெறும் ஜெனீவா கூட்டத்தொடருக்கு போவாரா என்பதே.

தற்போது சிவராத்திரிக்காக தமிழகம் சென்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பியதும் பயணமாவார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று எழுதியுள்ளது.

இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்க இருப்பதால் அதை தடுப்பதற்கான பயணத்தை இவர் மேற்கொள்வார் என்று எழுதப்பட்டுள்ளது. ( கால அவகாச அறிக்கை வெளியாகிவிட்டது, இனி தடுக்க முடியாது என்பது வேறொரு விடயம்.)

அப்புக்காத்துக்களும், இராணி அப்புக்காத்துக்களும் போய் வாதாடி வென்று வருவார் என்று தமது வாழ்வை அப்பம் நிறுக்க அப்புக்காத்துக்களிடம் கொடுத்த தமிழினம் மீண்டும் ஓர் அப்புக்காத்தை அனுப்பி வைப்பதில் புதுமை என்ன இருக்கப்போகிறதென்றால் விரோதம் கண்டியளே..!

இதற்கிடையில்..

பிரிட்டன் தலைமையில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு இப்போது இலங்கையும் இணை அனுசரணை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் விலகுவதாக மிரட்டிய இலங்கை இன்று பல்டியடித்துள்ளது.

அதேவேளை தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் செல்லவுள்ளனர் என்பது சிறப்புத் தகவல்.

அந்தக்காலத்தில் சென்னை போனால் கதாநாயகனாகலாம் என்ற தமிழ் சினிமாவும், கொழும்பு போனால் கோடீஸ்வரனாகலாம் என்ற யாழ்ப்பாண கனவுகளும் இப்போது ஜெனீவாவிற்கு நகர்ந்துள்ளன.

மறுபுறம் புதிய அரசியலமைப்பில் ஒன்றும் இல்லை அது பழைய எலும்புக்கூடு.. அதை ஏற்க வேண்டுமென கூட்டமைப்பும், சி.வி.விக்னேஸ்வரனும் கூறுகிறார்கள், ஆனால் அது தவறு முற்றாக நிராகரிக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கிறார்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின் மூன்று அரசியலமைப்புக்கள் வந்துள்ளன. அவை அனைத்தும் பெரும்பான்மை சிங்கள கட்சிகளாலேயே கொண்டுவரப்பட்டவை. அவற்றை தமிழர்கள் நிராகரித்தனர்.

ஆனால் இந்த நான்காவது மாற்றத்தை அரசுடன் கூட்மைப்பும் சேர்ந்து தயாரித்து இதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது. ஆனால் இந்த புதிய அரசியலமைப்பு பழைய எலும்புக்கூடுதான்.

ஆனால் பொய்கூறி ஏமாற்றுகிறது கூட்டமைப்பு என்று கூறுகிறார் ஜி.ஜி.பொன்னம்பலம் வழித்தோன்றலான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தமிழ் மக்களை எதிர்ப்பது போன்ற அரசியல் செய்தாலே சிங்கள வாக்குவங்கியை காப்பாற்றலாம்.. அதுபோல சிங்கள ;ஆட்சியை எதிர்ப்பதே தமிழ் வாக்குவங்கியை தக்க வைக்க அவசியம் என்ற அரசியலை ஏற்படுத்தியது யார்..? என்ற கேள்வியை கேட்க தமிழ் மக்களிடம் போதிய அறிவுப் பலமோ ஆளுமை உள்ள சிவில் சமுதாயமோ இல்லை.

இனப்பிரச்சனை தீர்வல்ல இப்போது முக்கியம்..

தீர்க்கத்தெரியாத 70 ஆண்டு தலைமைகள் என்ற விடயமே இப்போது முக்கியம்.

இனப்பிரச்சனையை தீர்க்க தெரியாத குற்றவாளிக்கூண்டில் அனைவரும் நிற்கிறீர்கள், மனித உரிமைகவுண்சிலின் நாயகன் பிரிட்டன் உட்பட என்ற கோணத்தில் காயை நகர்த்தினால் இந்த நாடகமே நின்றுவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அனைவரும் தெரியாதது போல நாடகம் ஆடுகிறோம் அவ்வளவுதான்.

பொருட்களை தொலைத்தது எங்கோ வெளிச்சமுள்ள இடமான ஜெனீவாவில் தேடும் மூடர்கூடம் 2 திரைப்படம் எப்போது வருமோ..?

மூடர்கூடம் திரைப்படத்தின் திரைக்கதையை ஜெனீவாவுடன் சேர்த்து கற்பனை பண்ணினால் அதைவிட சுவாரஸ்யம் வேறென்ன இருக்கப்போகிறதென சொன்னால் விரோதம் அவ்வளவுதான்.

மறுபுறம் சிறீதரன் எம்.பி கூறியபோது சம்மந்தனை தான் சுட திரியவில்லை என்றும், விடுதலைப் புலிகள் சுட திரிந்தார்கள் என்று சம்மந்தனே கூறியதாகவும் சுட்டிக்காட்டி, ஜெனீவாவில் விடுதலைப்புலிகள் மீதும் நான்கு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது யுத்தம் நடந்தபோது சுமந்திரன் நாட்டில் இல்லை அவருக்கு எதுவும் தெரியாது அறிக்கைகளை வைத்தே பேசி வருகிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய பத்திரிகை தலையங்கங்களின் சில புகைப்படங்களை அடியொற்றி இச்செய்தி எழுதப்படுகிறது.

அலைகள் 04.03.2019

Related posts