ஜமால் கஷோகி உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி இல்லத்தில் எரிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் அல்- ஜசிராவின் விசாரணையில் சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் துருக்கியில் உள்ள சவுதி தூதரக அதிகாரி வீட்டில் எரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் உடல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இறுதியில் உண்மை கண்டறியப்படும் என்றும் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தத் தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, சவுதி அரசை விமர்சித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் அக்டோபர் 2-ம் தேதி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும், துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க சவுதி அனுமதி அளிக்காமல் 13 நாட்கள் தாமதப்படுத்தியது என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
ஜமால் கஷோகி கொல்லப்படுவதற்கு முன்னரே சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அவரைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.