அதிமுக – பாஜ கூட்டணி பிரசாரம் துவங்கியது

சென்னை அருகே நேற்று நடந்த அதிமுக, பாஜ கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை அருகே கிளாம்பாக்கத்தில் அதிமுக, பாஜ கூட்டணிக் கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டமும், அரசின் புதிய திட்டங்கள் தொடக்க விழாவும் நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, தனி விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்றனர். முதலில் அரசின் புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. அதன்பின்னர், நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: நாம் இப்ேபாது இருக்கின்ற காஞ்சிபுரம் மண்ணுக்கு எனது வணக்கம். மகாகவி காளிதாஸ் இந்த காஞ்சிபுரம் குறித்து கூறும்போது, நகரங்களிலேயே சிறந்தது காஞ்சி என்று தெரிவித்துள்ளார். இப்போது காசியின் பாராளுமன்ற உறுப்பினரான நான், காஞ்சிக்கு வந்திருக்கிறேன். இதன் மூலம் நமது உறவு பலமானது, அது பிரிக்க முடியாதது.

தமிழக மண்ணின் மைந்தன் எம்ஜிஆர் மகத்தான மனிதர். அவரின் சிலையை நான் திறந்து வைத்துள்ளேன். இவர் தமிழக மக்களின் அடையாளமாக உள்ளவர். இவர் திரைத்துறையில் மட்டும் அல்லாமல் மக்களின் மனதிலும் கோலோச்சியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்காக திறமையாக செயல்பட்டவர். அவரின் சமூக நலத்திட்டங்கள் ஏழ்மையை எதிர்த்து போராடுவதற்கு வலிமை சேர்த்தது. இன்று நான் இரண்டு தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் பெயரால் அழைக்கப்படும். மற்றொன்று, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், வந்து சேரும் விமானங்கள் ஆகியவற்றின் நேரங்கள் குறித்த தகவல்கள் தமிழ் மொழியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை சென்றிருந்த போது நான் எம்ஜிஆர் பிறந்த ஊருக்கு சென்றிருந்தேன். அங்குள்ள இந்திய தமிழர்களுக்கு 14ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் 1000 வீடுகள் அங்குள்ள தமிழர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் முழுப் பணியும் விரைவில் முடிக்கப்படும். இந்தியாவிலேயே இலங்கைக்கு சென்ற பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. அங்குள்ளவர்களுடன் மனம்விட்டு பேசிவிட்டு வந்துள்ளேன். நண்பர்களே நமது குறிக்கோள் என்பது அனைவருக்குமான மேம்பாடு. அதேபோல மானிட பிணைப்பே எல்லா பிணைப்பிலும் மேலானது. அதனால் தமிழர்களுக்கு எங்கு பிரச்னை என்றாலும் மத்திய அரசு ஓடிச்சென்று உதவி செய்து வருகிறது. மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கியிருந்த போது முயற்சி செய்து அவர்களை கொண்டு வந்தோம். பாதிரியாரை ஆப்கானில் சிறைவைத்திருந்த போது 8 மாதம் முயற்சித்து அவரை கொண்டு வந்தோம். இப்போது அபிநந்தன் எப்படி மீட்டு கொண்டவரப்பட்டார் என்று தெரியும். இலங்கையில் இருந்து 1900 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேசி மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதேபோல சவுதி அரசால் கைது செய்யப்பட்டவர்கள் 850 பேர் மீட்கப்பட்டனர். யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டதோ அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் இந்த நாட்டின் பெருமைக்கு உரியவர்கள்.

ஜவுளித்துறையை முன்னேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுவரை நெசவாளர்களுக்காக 7 ஆயிரம் கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. விசை தறி தொழிலை மேம்படுத்தவும் மத்திய அரசு உதவி வருகிறது. நாடு முழுவதும் 2 லட்்சம் விசைத்தறிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்து 24 ஆயிரம் விசைத் தறிகள் தமிழகத்தில் மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பொறுத்த வரையில், தமிழகமும், காஞ்சிபுரமும் வளமிக்க இடங்களாக இருக்கின்றன. கடந்த 2013 முதல் 2017ம் ஆண்டு வரை வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி வருவாய் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்காக 66 நாடுகளுடன் இ-விசா வழங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து, நாட்டுக்கு வருவாய் பெருகும். சுற்றுலா வழிகாட்டிகள், கடைகளுக்கு வருவாய் கூடுகிறது. தேனீர் விற்போருக்கும் கூட வாய்ப்பு கிடைக்கிறது. பாதுகாப்பு மற்றும் திட்டமிடுவதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. நம்குறிக்கோள் இந்த நாட்டை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ெசய்யும் நாடாக மாற்றுவதுதான். அதன்படி இரண்டு பாதுகாப்பு தொழில் நுட்ப பூங்காக்களை அமைத்துள்ளோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பும் அமையும். இங்குள்ள எதிர்க் கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு பற்றி அலட்சியப் போக்குடன் இருக்கின்றனர். அவர்கள் சுயநலத்திற்காகவும், அரசியலுக்காகவும் ெசயல்படுகின்றனர். அதனால் வலிமையான இந்தியாவையும் விரும்பவில்லை, வலிமையான ராணுவத்தையும் அவர்கள் விரும்பவில்லை.

இந்தியா பன்முகத் தன்மை கொண்டது. மாநில அரசுகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யாமல் நாடு முன்னேற முடியாது. மாநில கட்சிகளின் விருப்பம் மற்றும் குரலுக்கு பதில் கிடைக்கும். இதற்கு காரணம் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதுதான். நாங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தலைமையிடத்தில் இருந்து அல்ல. மக்கள் தான் நமக்கு தலைமைப் பீடமாக இருக்கிறார்கள். அதனால் மாநில விருப்பங்களை நிறைவேற்றும் செயல்பாடாக நமது செயல்பாடு இருக்கும். ஆனால், காங்கிரஸ் கட்சியால் மாநில கட்சிகளில் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது. காரணம் அவர்கள் குடும்ப நலனை மையமாக கொண்டு முடிவு எடுக்கிறார்கள். காங்கிரசை நீங்கள் ஆதரித்தால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் கிராமங்களில் இருந்து இருக்காது. டெல்லியில் ஏசி அறையில் இருந்து எடுக்கும் முடிவுகளாக இருக்கும். மாநிலத் தலைவர்களில் முக்கியாக விளங்கியவர் காமராஜர். அவரை காங்கிரஸ் கட்சி பல முறை அவமதித்துள்ளது. அவர் செய்த குற்றம் என்ன. அவர் மக்களுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் குரல் கொடுத்தார். டெல்லியில் உள்ள ஒரு குடும்பத்தில் ஆட்சியை எதிர்த்தார். அதனால் அவர் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.

மாநில அரசுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அந்த அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் பழக்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. காங்கிரஸ் கட்சியானது 356 பிரிவை பயன்படுத்தி பலமுறை மாநில ஆட்சியை கலைத்துள்ளது. அந்த பிரிவை 100 முறை பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திரா காந்தி மட்டும் 50 சதவீதம் அதை பயன்படுத்தி கலைத்துள்ளார்.
தற்போது மோடி மீதான வெறுப்பு எல்லை தாண்டிவிட்டது. எதிர்கட்சியினரிடம் ஒரு போட்டி இருக்கிறது. அதாவது, மோடியை யார் அதிகமாக வசைபாடுவது என்பதுதான். சிலர் என்னுடைய ஏழ்மை, குடும்பம், என் சமூதாயம் ஆகிவற்றை வசை பாடுகின்றனர். ஒரு காங்கிரஸ் தலைவர் என்னை கொலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். என்னுடைய ஒவ்வொரு துளி ரத்தம், மூச்சு ஆகியவை இந்த மக்களுக்காக உழைக்கவே பயன்படுத்துவேன். என்னிடம் இருப்பதை வைத்து இந்த நாட்டை முன்னேற்ற பயன்படுத்துவேன். குறிக்கோள் இல்லாத எதிரிணியின் கூட்டணியிடம் கேள்விகள் கேட்க வேண்டும். உங்கள் செயல்திட்டம் என்ன. உங்கள் தலைமை யார் என்றும் கேளுங்கள்.

விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். சமூக நீதியை பொறுத்தவரை நியாய உணர்வோடு செயல்படுகிறோம். ஊழலை களைவதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் எந்த மன்னிப்பு போக்கும் இருக்காது. இந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மக்கள் ஆசீர் வாதத்துடன் இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்த காத்திருக்கிறோம். தமிழக மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது எல்லாம், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். உங்கள் அனைவரின் கனவுகளை நினைவாக்க, வாய்ப்பு கொடுங்கள். நாளை நமதே, நாற்பதும் நமதே.
இவ்வாறு மோடி பேசினார்.

Related posts