கமலின் கட்சியில் இணைந்தார் கோவை சரளா

தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? என்று ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த கோவை சரளா பேசும் போது குறிப்பிட்டார்

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் கமல் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 8) உலக மகளிர் தினம் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்த கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டார்.

அக்கூட்டத்தில் நடிகை கோவை சரளா பேசியதாவது:

”பல இடங்களைப் பார்த்திருக்கிறேன். எந்த இடத்துக்குப் போவது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும் போது, இந்த இடம் நல்லதாகத் தெரிந்தது. அதனால் தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். போகிற போக்கைப் பார்த்தால் ‘மக்கள் நீதி மய்யம்’, ‘மகளிர் நீதி மய்யம்’ ஆக மாறிவிடும் என நினைக்கிறேன்.

பெண்கள் வீட்டின் கண்கள் என்பார்கள். இனிமேல் அந்தக் கதையெல்லாம் இருக்கவே கூடாது. நாம் சோறு ஆக்கி கொடுப்போமா, ஆண்கள் சாப்பிட்டுவிட்டுச் சென்று ராஜ்ஜியம் பண்ணுவார்களாம். இனிமேல் விடுவோமா நாம்?. பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். சக்தி இல்லையேல் சிவமில்லை.

ஆண் – பெண் இருவரும் இணைந்து செயல்பட்டால், இந்த நாடு நலம்பெறும் என்பது உறுதியாகிறது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல இடங்களில் பல சூழ்நிலைகளில் நாம் நலிந்தும், மலிந்தும் போய்விட்டோம். இனி அந்த நிலை நமக்கு வரக்கூடாது. ஆகவே, வரும் தேர்தலில் அதிகப் பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பெண்கள் நினைத்தால் ஏன் முடியாது?. நம்மூர் ஆண்கள் நம்மை மீறிப் போய்விடுவார்களா?. நேரா போற ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்கு ஓட்டு போடுற என்று நாம் சொன்னால் ஏன் நடக்காது என்கிறேன். பெண்கள் நாம் இறங்கி தமிழ்நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘மக்கள் நீதி மய்யம்’ ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பல சாதனைகள் செய்திருக்கிறார் கமல் சார். இத்தனை ஆண்டுகாலம் எனக்கு நீங்கள் உறுதுணையாக இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு சேவை செய்வதற்காக நான் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து என்னத்த கிழிப்பார்கள் என்றார்கள். சினிமாவில் நடித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் உண்மையான மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும். பிச்சைக்காரராக நடித்தால் அதன் மனநிலை என்ன என்பதை உணர முடியும். ஆகையால், தமிழக மக்கள் மனநிலை என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? நன்றாகத் தெரியும்.

தலைவர் கமல் நடிப்பு வேலையைப் பார்த்தது போதும், இந்த வேலையைப் பார் என்று உத்தரவிட்டதால் வந்துவிட்டேன். முன்பு, தலைவருக்கு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன். “நீங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்துக்குப் போனாலும் அங்கு உங்கள் பின்னால் நாங்கள் பல பேர் இருப்போம்” என்று சொல்லியிருந்தேன். ஆகையால், தான் இப்போது அவர் நடக்கும் பாதையிலே, நாங்கள் பின்னால் செல்லத் தயாராகவுள்ளோம்”.

இவ்வாறு கோவை சரளா பேசினார்.

Related posts