அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் என்று நம்புவதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பது அத்தியவசியமான விடயமல்ல என்று அவர் கூறியுள்ளார்.
தனது இன ரீதியாக பாரபட்சமற்ற மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் சிறுபான்மை வாக்காளர்களை ஈர்க்கும் என்று தான் நம்புவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது,
தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று தமிழ் கட்சிகளுக்கு தெரியாதுள்ளது. தமிழ் கட்சிகள் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்களுக்கு அந்தத் தேவையில்லை.
அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார சமநிலையும் நாட்டின் அனைத்து துறையிலும் அபிவிருத்தியும் இருந்தால் தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராகவும் இருக்க முடியும் என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் அபிவருத்திக்காக தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது பல விடயங்களைப் பற்றிப் பேசினாலும், அவற்றைச் செயற்படுத்துவதில் தோல்வியுற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படுவதற்கு முன்னதாக அகற்ற வேண்டும் என்று முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்