தேமுதிக சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொருளாளர் பிரேமலதா மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். செய்தியாளர்களை எதிர்க்கொண்ட அவர் யார் நீ? வா போ என அழைத்ததால் செய்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
தேமுதிக திமுக, அதிமுக என மாறி மாறி கூட்டணிப்பேச்சு நடத்தியதால் இதுவரை ஒரு முடிவுக்கு வராமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிக தொகுதிகளை டிமாண்ட் செய்ததால் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் மேடை ஏறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தேமுதிக முரண்டு பிடித்ததால் பங்கேற்கவில்லை. திமுக பொருளாளர் துரைமுருகனை திடீரென தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்ததை செய்தியாளர்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்தாக தெரிவித்தனர். இதையடுத்து துரைமுருகன் கூட்டணிக்காக வந்ததாக சொன்னார். அதற்கு சுதீஷ் மறுப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்பிலும் வார்த்தை முற்றியது. மாறி மாறி பேட்டி அளித்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா முதலில் நான் அனைவருக்கும் பதில் சொல்வேன் என தெரிவித்த அவர் முதலில் நீ கேளு என பிரபல செய்திச்சானலின் செய்தியாளரை ஒருமையில் அழைத்த அவர் உன் பெயர் என்ன என்று கேட்டார்.
அதற்கு அவர் பெயரைச் சொன்னதும் நீ தானே நேற்று இழுபறி என்று சொன்னாய் என்று ஒருமையில் பேசினார். பின்னர் துரைமுருகனைக்குறிப்பிட்டு நம்பி வந்தால் இப்படித்தான் மீடியாவை அழைத்து சொல்வீர்களா? என்று கேட்டார்.
நீங்கள் 24 மணி நேரம் எங்கள் கேட்டு வாசலில் காத்திருந்தால், நாங்கள் ஓடி ஓடி வந்து உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? என திரும்ப திரும்ப கூறினார். இதற்கு செய்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
பின்னர் மாறி மாறி கூட்டணி வைக்கிறீர்களே என கேள்வியாளர்கள் கேட்டதற்கு பிரேமலதா எனக்கு கொள்கை இல்லை என்று உனக்கு யார் சொன்னா? உனக்கு தெரியுமா? எனக்கேட்டார்.
இதற்கும் செய்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பிறகு பிரேமலதா ஒவ்வொருத்தராக கேளுங்கள். பொண்ணு இருந்தால் எல்லோரும் பொண்ணு கேட்கத்தான் செய்வார்கள், இதை வைத்து கொள்கை இல்லை இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று பதில் கேள்வி கேட்டார்.
துரைமுருகன் கூறியது குறித்த கேள்விக்கு அதை அங்கப்போய் கேளு என கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அதிமுகவையும் விமர்சித்தார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் இந்த செயலால் செய்தியாளர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்தது. கூட்டத்தின் முடிவில் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். இரண்டுநாள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.