கணவன் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் அவரின் இரண்டாவது மனைவி, முதல் மனைவியின் 2 மகள்கள், மகளின் காதலன் உதவியோடு மூன்றாவது மனைவியைக் கொலை செய்துள்ளார். மும்பையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய பால்கர் பகுதி காவல் ஆய்வாளர் ஜிதேந்திர வன்கோட்டி, மும்பையின் நல்ல சோபரா பகுதியில் வசித்து வருபவர் சுஷில் மிஸ்ரா. 45 வயதான இவர் கான்ட்ராக்டராகப் பணியாற்றி வருகிறார். உத்தரப் பிரதேசத்தில் இவரின் முதல் மனைவி தனியாக வசித்து வருகிறார். இதற்கிடையே 2017-ல் பார்வதி மனே என்பவரை மிஸ்ரா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
மிஸ்ரா, பார்வதி மற்றும் மிஸ்ராவுடைய முதல் மனைவியின் 2 மகள்கள் ஆகிய 4 பேரும் டான் லேன் பகுதியில் குடியேறினர்.
ஓராண்டுக்கு முன்னதாக மிஸ்ரா மூன்றாவதாக யோகிதா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இருவரும் லிங்க் சாலையில் உள்ள அபார்ட்மென்டுக்குக் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகு மிஸ்ரா, பார்வதியின் வீட்டுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல வீட்டுச் செலவுக்குத் தேவையான பணத்தையும் மிஸ்ரா சரியாகக் கொடுக்கவில்லை. இதனால் பார்வதி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதற்கிடையே பிப்ரவரி 28-ம் தேதி, மிஸ்ரா அலுவலக வேலைக்காக குஜராத் சென்றுள்ளார். யோகிதா தனியாக இருக்கும் நேரத்துக்காகக் காத்திருந்த பார்வதி, இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டார்.
மிஸ்ராவுடைய முதல் மனைவியின் இரு மகள்கள், மகளில் ஒருவரின் காதலனை அழைத்துக்கொண்டு யோகிதா இருக்கும் இடத்துக்குச் சென்றார் பார்வதி. கழுத்து நெரித்து யோகிதாவைக் கொலை செய்தனர். அனைவரும் சேர்ந்து போர்வையால் அவரின் உடலைச் சுற்றி, நல்ல சோபரா பகுதியில் உள்ள ஓர் இடத்தில் வீசிவிட்டுச் சென்றனர்.
அடுத்த நாள், உள்ளூர் மக்கள் யோகிதாவின் உடலைக் கண்டனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஆட்டோவில் யோகிதாவின் உடல் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு ஓடும் 4,000 ஆட்டோக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநரைக் கண்டுபிடித்தனர். அவரின் உதவியோடு பார்வதியும் மற்றவர்களும் பிடிபட்டனர் என்று காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.