மதுரை மக்களவைத் தொகுதியை திமுக தலைமை, மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவிவரும் தகவலால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மு.க.அழகிரியால் மதுரையில் போட்டியிட திமுக தயங்குவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இன்னும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக திமுக அறிவிக்கவில்லை. ஆனால், தென் மாவட்டத்தில் திமுக போட்டியிடும் முக்கிய தொகுதியாக மதுரை இருக்கும் என தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். கடைசியாக, மு.க. அழகிரி திமுக சார்பில் மதுரையில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கடந்த முறை திமுக வேட்பாளராக களமிறங்கிய வேலுச்சாமி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், கருணாநிதி இருந்தபோதே அவரது மகன் அழகிரி திமுகவில் ஓரங்கட்டப்பட்டார். அவரது மறைவுக்குப் பிறகு மு.க. ஸ்டாலின் முக்கியப் பொறுப்புக்கு வந்தார். அதன்பிறகு, மு.க.அழகிரி எவ்வளவோ இறங்கி வந்தும் ஸ்டாலின் தரப்பின் கடும் எதிர்ப்பால் திமுகவில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போதைய மக்களவைத் தேர்தலில் அவர் இல்லாமல் மதுரையில் திமுக வெற்றிபெற வேண்டும் என அக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு பிரமாண்ட வெற்றி மதுரையில் கிடைத்தால் அது திமுகவின் எதிர்காலத்துக்கும், ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்கை பெற்றுத்தரும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, மாநகர் பொறுப்புக்குழு தலைவர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, டாக்டர் சரவணன், செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், மு.க.அழகிரி கடைசி நேரத்தில் இடையூறு செய்வார் என்ற குழப்பத்தில் ஸ்டாலினும், கட்சி மேலிடமும் இருப்பதாக சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதனால் மதுரையை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்க உள்ளதாக சில திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரையில் திமுக போட்டியிட வில்லை என்றும், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி போட்டியிடுவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியது: மதுரையில் உ.வாசுகியை போட்டியிட வைக்க கட்சித் தலைமை முயற்சிப்பது உண்மைதான். ஆனால், இன்னும் மதுரை தொகுதியை திமுக மேலிடம் ஒதுக்கவில்லை. கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்,’’ என்றனர்.
இதுகுறித்து திமுகவினர் சிலர் கூறியதாவது: மதுரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஸ்டாலின் தயங்காமல் திமுக வேட்பாளரை நிறுத்தலாம். மதுரையை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவதாக பரவும் தகவலால் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். ஒருவேளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் கட்சியினரின் ஒத்துழைப்பு இருக்குமா என்பது சந்தேகமே என்றனர்.