இராணுவம் சம்மந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, “மத்திய மாநில அரசின் கண்காணிப்பில் இருந்து முக்கிய ஆவணங்கள் திருடு போவதாக கூறப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, நிதிநிலை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே, காணாமல் போன நிகழ்வுகள் உண்டு.
டந்த காலத்தில் இராணுவம் சம்பந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால், சந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பதும் வரலாறு.
தமிழக வரலாற்றிலும் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் காணாமல் போன திருட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட பால் கமிஷன் அறிக்கையை, சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கும் முன்பே அதை திருடி வெளியிட்டது.
தி.மு.க. என்பது கடந்த கால வரலாறு. பால் கமிஷன் அறிக்கையை திருடி வெளியிட்டதால், திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும், அதற்கான நீதி விசாரணை கேட்டு கருணாநிதி நடை பயணம் செய்ததும் வரலாறு.
இதே பின்னணியில் வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அரசாங்கத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இராணுவ இரகசிய ஆவணங்கள் முறைகேடாக திருடி பத்திரிக்கைகளில் கசிய விடுவது, நாட்டுக்கு பாதகமாகவும், எதிரி நாட்டுக்கு சாதகமாகவும் அமையும் என்பதால், இந்த தேசத்தை கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டிக்காமல், ஏதோ இதையும் மோடி எதிர்ப்புக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு, திருடுபவர்களுக்கு ஆதரவாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் செய்யலாமா..? இப்படி திருடுபவர்களை, திருட்டை நியாயப் படுத்துவோர்களையும் அதற்கு துணை போனவர்களையும் தேசத்துரோகிகள் என்று அழைப்பதில் என்ன தவறு..? தன் சுயநல பதவி சுகத்திற்காக, திருட்டுகளை நியாயப்படுத்தும் இவர்களும் ஜனநாயக திருடர்களே..!” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.