உலகத்தோடு இணைந்து போகக்கூடிய உலகை வெற்றிகொள்ளக்கூடிய நவீன கல்வித் திட்டத்தை ஏற்படுத்தும் பாரியதொரு பொறுப்பை தனது அரசாங்கம் ஏற்றுச்செயற்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் 30 வருடங்களுக்கு முன்னர் கண்ட கனவு இப்போது நனவாகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது 80 ஆயிரம் கல்வி டிப்ளோமாப் பட்டதாரிகள் பணிபுரிவதாகவும் இவ்வருட இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்கப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அனைத்துப் பாடசாலைகளிலும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய போதனாபீட டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது :-
நாட்டில் நவீன கல்வித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். ஒரு இலட்சம் என்ற இலக்கில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் 90 ஆயிரம் பேராக அதிகரித்து அடுத்த வருடத்தில் இலக்கை எட்டிப்பிடிப்போம். நாம் எமது நாட்டில் குறுகி வாழமுடியாது உலகை எட்டிப்பிடிக்க வேண்டும். அதனை அடைவதற்கு நவீன கல்வி முறைகளைக் கிராமிய மட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இன்றைய அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் கல்விக்காக பெரும்பங்களிப்பை செய்துள்ளது. அதனூடாக நவீன கல்வித் திட்டத்தின் பக்கம் எம்மால் நகர முடிந்தது. இன்று இந்த இடத்தில் மூவாயிரம் டிப்ளோமா பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுக்கின்றோம். தற்போது நாட்டில் உள்ள பாடசாலைகளில் 80 ஆயிரம் டிப்ளோமா பட்டதாரிகள் கல்வி கற்பித்து வருகின்றனர். பயிற்சிபெறாத அனைத்து ஆசிரியர்களுக்கும் டிப்ளோமா பயிற்சியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்வியமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் பாடசாலைகளில் பயிற்சிபெறாத ஆசிரியர்களே அதிகமாகக் காணப்பட்டனர். எந்தப் பாடசாலையை எடுத்துக்கொண்டாலும் பயிற்சிபெற்றவர்கள் ஒருவர் அல்லது இருவரே காணப்பட்டனர். அன்று நான் ஓர் உறுதிப்பாட்டை எடுத்தேன். கல்வித்துறையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களை உருவாக்க வேண்டுமென்பதே அந்த எண்ணமாகும். எனது அந்தக்கனவை நனவாக்க முப்பது வருடங்கள் பிடித்துள்ளது. 15 வருடங்களுக்குள் இதனைச் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், அரசியல் மாற்றங்களால் அது சாத்தியப்படாமல் போனது.
எதிர்காலத்தில் அரசாங்கம் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கும் எண்ணம் கிடையாது. கல்வி டிப்ளோமாப் பயிற்சியைப் பெற்றுக்கொடுத்த பின்னரே நியமனங்கள் வழங்கப்படும்.
இந்த வைபவத்தில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வியமைச்சு உயரதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகள், கல்வி போதனா பீட விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர்.