நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வெற்றியின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் ‘சர்கார்’ படத்துக்கு பிறகு மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். கதை தேர்வில் கவனம் செலுத்துவதால் அதிக படங்களை ஒப்புக்கொள்வதை தவிர்க்கிறார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
தென்னிந்திய மொழிகளில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இது சந்தோஷமாக இருக்கிறது. படப்பிடிப்பு அரங்கில் நூறுபேரை கூட நாம் குருவாக பார்க்கலாம். அவர்கள் செய்கிற வேலையில் இருக்கும் நெளிவு சுளிவுகள். லைட் பாயில் இருந்து டைரக்டர் வரை வேலையில் காட்டும் நேர்த்தி என்னை மிகவும் கவரும்.
நடிகர்கள் கதைகளை தேர்வு செய்யும் விதத்தில்தான் சினிமாவில் நிலைத்து இருப்பார்களா? ஓரம் கட்டப்படுவார்களா? என்பது தெரியவரும்.
சில நடிகைகள் கதைகள் தேர்வில் அக்கறை காட்டுவார்கள். அவர்கள் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றாலே எல்லோருக்கும் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகி விடும்.
என் விஷயத்திலும் நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த பிறகு அப்படித்தான் ஆகிவிட்டது. நான் எந்த படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. நல்ல முடிவுகள் எடுப்பது சிறுவயதில் இருந்தே எனக்கு இருக்கிறது. அதனால் கதைகள் விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன். இதுதான் எனது வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.