மது போதையில் வாகனங்களைச் செலுத்துவதால் அதிகரித்துள்ள வாகன விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் களியாட்ட விடுதிகளை அண்மித்த பகுதியில் இன்று நள்ளிரவு முதல் விசேட சுற்றிவளைப்புக்கள் நடத்தப்படவுள்ளன. களியாட்ட விடுதிகளை சுற்றி அதிகரித்துள்ள டிபெண்டர் கலாசாரத்தை இல்லாமல் செய்யும் வரை இந்த சுற்றுவளைப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மேல்மாகாணத்தில் நடத்திய விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனத்தை செலுத்திய 527 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் வாகன அனுமதிப் பத்திரங்களை நிரந்தரமாக இரத்துச் செய்யும் வகையில் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். கொழும்பு நகரில் களியாட்ட விடுதிகளை அண்மித்த பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக டிபெண்டர் கலாசாரமொன்று காணப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் நாளை நள்ளிரவு முதல் (இன்று நள்ளிரவு) தொடர்ச்சியான சுற்றுவளைப்பு நடவடிக்கையை மேற்கொள் ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளிலேயே அதிக விபத்துக்கள் இடம்பெறுகின்றன. விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் நேரமாக மாலை 4 மணி முதல் இரவு எட்டு மணி வரையான நேரப் பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றத்துக்காக கடந்த வருடத்தில் மாத்திரம் 1,50,094 பேர் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையே இதுவாகும். உண்மையில் மது அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை இதைவிட 20 மடங்கு அதிகமானதாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் போதையில் வாகனங்களைச் செலுத்துபவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். போதையிலுள்ள சாரதிகளை அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படும் பலூன் கருவி போது மானளவு பொலிஸிடம் உள்ளது. எதிர்வரும் 3 வாரங்களில் மேலும் 25,000 கருவிகளைக் கொள்வனவு செய்யவுள்ளோம். அதேநேரம், மதுபோதை மாத்திரமன்றி ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறியும் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான கருவிகள் மிகவும் குறைந்தளவே காணப்பட்டாலும் நாடு முழுவதிலும் உள்ள 492 பொலிஸ் நிலையங்களுக்கும் இந்தக் கருவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
இதேவேளை, மதுபோதையில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த மூன்று வருடத்தில் மாத்திரம் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 2,997 பேர் இவ்வாறான விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக வீதிகளில் நடந்துசென்ற 2,800 பேர் இதுபோன்ற விபத்துக்களால் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடத்தில் இடம்பெற்ற 4,398 விபத்துக்களில் 305 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.
மதுபோதையில் வாகனங்களைச் செலுத்துவதைத் தடுக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட சமூகத்துக்கும் உள்ளது. சாரதிகள் மாத்திரமன்றி அவர்களுடன் பயணிப்பவர்களும் அதனை உறுதிப்படுத்த உதவ வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.