வரும் 2020-ம் ஆண்டு கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை உருவெடுக்கும் என்று அந்நாட்டு ராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார். இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், சமாதானத்தை நிலை நாட்டவும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும் ராணுவத்தினர் முக்கிய பங்காற்றினர் என்றார். கண்ணிவெடிகளை அகற்றுவது ராணுவத்தினரின் பணிகளில் முக்கிய பணியாக உள்ளதாகவும் அவர் கூறினார். வரும் 2020-ம் ஆண்டு கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டு கண்ணி வெடி அற்ற நாடாக இலங்கை மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பங்கள் விரைவாக வளர்ந்து வருகின்றன. அதற்கேற்றாற் போல நாமும் மாற வேண்டும். ஆனால் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிவுக்கு வழிவகுக்க கூடாது. தற்போதைய இளைஞர்கள் மத்திய்ல் கேளிக்கைக்கும், போதைக்குமே முக்கியத்துவம் உள்ளது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார். இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு மூன்று வருடங்களுக்கு 60 மில்லியன் குரோன்களை வழங்க நார்வே ஒப்புதல் தெரிவித்துள்ளது நினைவு கூறத்தக்கது.
கடந்த வாரம் இலங்கை வந்த நார்வேயின் இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் நடந்த சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.தேசிய மற்றும் சர்வதேச நிறுவனத்தின் பங்களிப்புடன் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போர் காலங்களில் வலுக்கட்டாயமாக தங்களது பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், மீண்டும் தங்களது சொந்த பகுதிகளுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்ப கூடிய வாய்ப்பை வழங்கும் பொருட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.