சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் நடிக்கும் படங்களின் தலைப்பும் ‘ஹீரோ’ என வைக்கப்பட்டுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்க, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (மார்ச் 13) படத்தின் பூஜை நடைபெற்றது.
ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்துக்கும் ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால், அனைத்து மொழிகளுக்கும் பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் இதற்குமுன் 1984-ம் ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் ‘ஹீரோ’ என்ற தலைப்பில் படம் வெளியாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நிதின் நடிப்பில் இன்னொரு படமும் இதே தலைப்பில் வெளியாகியுள்ளது. தெலுங்கைப் பொறுத்தவரை இந்த ‘ஹீரோ’ தலைப்பு பயன்படுத்தப்படுவது இது மூன்றாவது முறை.
தற்போது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பும் ‘ஹீரோ’ என இருப்பதால், இரண்டு படங்களில் ஏதேனும் ஒரு தரப்பு கண்டிப்பாகப் படத் தலைப்பை மாற்றியாக வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா படத்துக்காக ஏற்கெனவே ‘ஹீரோ’ என்ற தலைப்பைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவுசெய்து, அதைக் கடந்த வருடம் (2018) ஜூன் மாதம் 14-ம் தேதி புதுப்பித்துள்ளனர். வருகிற ஜூன் மாதம் 14-ம் தேதிவரை அதற்கான காலக்கெடு உள்ளது. இந்த ரசீதை விஜய் தேவரகொண்டா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.