ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் ஜனாதிபதி தனது பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயல்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தன் சார்பில் ஜெனீவா அனுப்பவுள்ள மூவரடங்கிய பிரதிநிதிகள் குழு உத்தியோகப்பற்றற்றதென சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி, அக்குழுவுக்கான பயணச் செலவை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்க முடியாதென்றும் உறுதிபடக் கூறினார்.
வடமாகாண ஆளுநர் என்பவர் அரசாங்கத்தின் பணிகளை நிறைவேற்றும் ஜனாதிபதியின் ஒரு முகவர் மட்டுமே என்றும் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த இருவர் ஜெனீவா செல்வதானது பாராளுமன்றத்தை பரிகாசத்துக்கு உள்ளாக்கும் செயலென்றும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
அத்துடன் பதினொரு இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான கடற்படைத் தளபதி கரன்னாகொடவின் வழக்கு விவகாரம் உள்நாட்டு நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருப்பதனால் சர்வதேச நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிடும் வகையில் ஜெனீவா வழிசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைப்பிலான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்குஅவர் மேலும் கூறியதாவது-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மூவரடங்கிய குழுவை ஜெனீவாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளார்.இவர்கள் தன்னை பிரதிநிதித்துவப் படுத்துவரென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானமானது ஜெனீவா செயற்பாடுகளிலிருந்து தான் மெதுவாக கழன்று கொள்வதற்காக எடுக்கும் முயற்சியாகவே எமக்குத் தெரிகின்றது.
உண்மையில் ஜனாதிபதி தனக்கு பதிலாக வேறு ஒரு பிரதிநிதிகள் குழுவை அனுப்புவதன் பின்னணி என்ன என்பது எமக்கு தெரிந்தாக வேண்டும். ஜெனீவாவில் ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்வதற்கு எதற்காக வேறொரு பிறிதான குழு? அத்துடன் அக்குழுவுக்கு மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ள என்ன அதிகாரம் உள்ளது?
எதிர்தரப்பு உறுப்பினர்களை அனுப்புவது ஜனாதிபதியின் உறுதியான நோக்கமாக இருக்குமானால், உத்தியோகப்பற்றற்ற தூதுக்குழுவுக்கான செலவீனத்தை பாராளுமன்றத்தில் எம்மால் அனுமதிக்க முடியாது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா செல்வது நியயமானதே. எனினும் வேறு நபர்கள் அதுவும் எதிர்க்கட்சியை சேர்ந்த இருவர் அங்கு செல்வதை எந்த வகையிலும் எம்மால் அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதி இந்த நாட்டினதும் அமைச்சரவையினதும் தலைவர். அவர் ஒரே கட்சி, அதுவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களை அனுப்ப தீர்மானித்துள்ளதானது பாராளுமன்றத்தின் செயற்பாடுகளையே பரிகாசத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
அவ்வாறு ஒரே கட்சியை சேர்ந்த இருவரை ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதித்துவம் செய்யவது நியாயமானதா? என நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கேட்க விரும்புகின்றேன்.
வடமாகாண ஆளுநரும் வட மாகாண மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜெனீவா செல்லவிருப்பதாக எனக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் என்பது ஜனாதிபதியின் முகவர். அவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறைவேற்றும் ஒரு அதிகாரி மட்டுமே.
அண்மையில் இந்தியாவிலுள்ள அகதிகளை சந்திப்பதற்காக வட மாகாண ஆளுநர் ஒரு தூதுக்குழுவினருடன் இந்தியா செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்.
அக்குழுவின் பட்டியலில் ஒரு நீதித்துறை அதிகாரியும் உள்ளார். அகதிகளை சந்திப்பதற்கு நீதித்துறை அதிகாரி எதற்கு? நிறைவேற்றுத்துறை இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை மூலம் பாராளுமன்றம் கேலிக்கு உள்ளாகியுள்ளது.