மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இந்த முறை சீட்டு இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தகவல்.
தமிழக காங்கிரஸில் அதிரடிக்கு பெயர் போனவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரொடு தந்த பெரியாரின் பேரன், திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சம்பத்தின் மகன் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர்.
அதிரடி கருத்துக்களால் எதிரணியினரை கலங்கடித்தவர். ஈரோடு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என பலமாக எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஈரோடு தொகுதியை மதிமுக வலியுறுத்தி கேட்டு வந்தது. ஒரு கட்டத்தில் வைகோவை நீங்கள் மாநிலங்களவையில் நின்று எம்பியாக வேண்டும் என திமுக தலைமை விருப்பம் தெரிவிக்க அப்படியானால் ஈரோடு தொகுதியை தாருங்கள் என வைகோ கோரிக்கை வைக்க தட்டாமல் ஏற்றது திமுக.
மிக முக்கியமான கூட்டணிக்கட்சி, ஒரு இடம் மட்டும்தான் அதுவும் விரும்பிய இடம் என்பதால் உடனடியாக மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு இல்லை என்பது உறுதியானது. பின்னர் அவருக்கு தொகுதியே இல்லை எல்லாம் இளையவர்களுக்கு என்கிற தகவல் வெளியானது.
மறுபுறம் கே.எஸ்.அழகிரி பா.சிதம்பரம் ஆதரவாளர் அதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கான தொகுதியை வற்புறுத்தவில்லை என ஈவிகேஎஸ் ஆதரவாளர்கள் சிலர் கூற அதை அப்பட்டமாக மறுக்கின்றனர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் சிலர்.
அனைத்தும் டெல்லி மேலிடம் ராகுலின் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவிக்கும் அவர்கள், ஈவிகேஎஸ் பழைய பந்தாவில் செய்த சில காரியங்கள் அவரை ராகுலிடமிருந்து தள்ளிவைத்தது, கடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றதும் தன்னிச்சையாக பதவியை ராஜினாமா செய்தது, திருநாவுக்கரசர் தலைமை ஏற்றவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு அவர் மாவட்ட தலைவர்களை நியமித்தபோது தனது ஆதரவாளர்களுக்காக மோதியது போன்றவை அவருக்கு எதிராக திரும்பியுள்ளது என்கின்றனர்.
அதுதான் தற்போது எதிரொலிக்கிறது என்றனர். இதே நிலைதான் குஷ்புவுக்கும் என்கின்றனர். என்னதான் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருந்தாலும் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளராக மாறி கோஷ்டி பூசலில் ஈடுபட்டதும், கட்சி அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தி செயல்பாடுகளை குறைத்துக்கொண்டதும் அவர் இளைய தலைமுறையாக இருக்கிறார், கட்டாயம் அவருக்காக சீட்டு கிடைக்கும் என நினைத்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அவருக்குத்தானே முன்னுரிமை கிடைத்தது என்று கேட்டபோது அது அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பதால் அமரவைக்கப்பட்டார், ஆனால் அவர் ஈவிகேஎஸ் ஆதரவாளர் என தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது என்றனர்.
இளைய தலைமுறை தலைவராக இருந்தும் கோஷ்டி அரசியல் அவரை வீழ்த்தியது என்று தெரிவித்த அவர்கள் சோனியா காலத்து காங்கிரஸ் அல்ல இப்போது இருப்பது இது வேற என்று தெரிவித்தனர்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குஷ்பு, இளங்கோவன் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, அதனால்தான் அவரும் விருப்பமனு அளிக்கவில்லை என்று காங்கிரஸ் வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.