ஆத்தும ஈடேற்றத்துக்கானவழி.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாக இருக்கிறது. 1கொரிந்தியர் 1:18
உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் (இன்று ஏனைய மக்களும்கூட) இந்நாட்களை லெந்துநாட்கள் எனக்கருதி இயேசுவின் சிலுவைப்பாடுகளையும், மரணத்தையும்
நினைவுகூர்ந்து அதை விசேசித்த நாட்களாக நினைத்து அனுசரித்து வருகிறார்கள். கிறிஸ்தவ மார்க்கத்தின் மகிமை இயேசுகிறிஸ்துவின் சிலுவையே.
அப்போஸ்தலனான பவுல் இயேசுவை சொந்தஇரட்சகராக ஏற்றுக்கொள்ளுமுன் தனது படிப்பையும், பணத்தையும், சமூக அந்தஸ்த்தையும், பதவியையும் குறித்து மேன்மை பாராட்டினான். ஆனால் இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட வராக கண்டபோது, முழு உலகத்தின் மகிமையும் சிலுவையில் அறையப் பட்டிருப்பதைக் கண்டார்.
வனாந்தரத்தில் மோசே சர்ப்பத்தை உயர்த்தினதுபோல தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து எல்லோருடைய கண்களுக்குக்கும் முன்பாக சிலுவையில் உயர்த்தப்பட்டார். அன்று உயர்த்தப்பட்ட வெண்கலசர்ப்பம் மனித குலத்திற்கு வந்த மாபெரும் மரணதண்டனையை நிவர்த்தி செய்யும் பரிகாரமாக வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது. பாம்பினால் தீண்டப் பட்டவர்கள் அந்தவெண்கல சர்ப்பத்தை நோக்கிப் பார்த்து மரணத்திற்கு தப்பினார்கள். (எண்ணாகமம் 21:1-9வரை வாசிக்கவும்)
ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து முழுஉலகத்தின் பாவங்களுக்காக சிலுவையிலே உயர்த்தப்பட்டார். அந்த சிலுவையில் அறையப்பட்ட இரட்சகரை நோக்கிப் பார்க்கிற ஒவ்வொருவரும் இன்றுவரை பாவமாகிய நித்திய மரணத்தி னின்றும், நித்திய அழிவில் இருந்தும், நித்திய நரகத்தினின்றும் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இனிமேலும் விடுவிக்கப்படுவார்கள்.
அன்று தவறு செய்யும் குற்றவாளிகளை தண்டிக்க சிலுவை உபயோகிக்கப்பட்டது. எனவே சிலுவை என்பது தண்டனைக்கு அடையாளம். இயேசு கிறிஸ்து எவ்வித தவறோ, குற்றமோ, பாவமோ செய்யவில்லை. ஆனால் குற்றவாளிகளை தண்டிக்கும் சிலுவைக்கு அவர் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆதலால் இயேசு குற்றமற்றவராக, பாவமற்றவராக சிலுவையில் அறையப்பட்டபோது, சிலுவை இரட்சிப்புக்கு அடையாளமாக, பாவமன்னிப்புக்கு அடையாளமாக, தியாகத்திற்கு அடையாளமாக, மகிமையடைந்தது.
இழிவாக கருதப்பட்ட சிலுவை, இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் மகிமையும், மேன்மையும் அடைந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட சிலுவை இன்றும் இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் மகிமையின் சின்னமாக விளங்குகிறது.
நீங்களும் நானும் எமது பாவங்கள், சாபங்கள், நோய்கள், பிசாசின்பிடிகள் இப்படியான பலவற்றிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியுடனும், சந்தோசத்துடனும் வாழும்படியாக, அவர் சிலுவை மரணத்தின்மூலம் மனுக்குலத்தை விடுவித்து ஜெயத்தை எமக்குத் தந்தார். நாம் போராடி ஜெயிக்க முடியாத இக்காரியங்களில் இருந்து, எமக்காகப் போராடி ஜெயத்தை அவர் சிலுவையில் எடுத்தார்.
இன்று உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் ஒரே நம்பிக்கை இயேசுகிறிஸ்துவின் சிலுவை மாத்திரமே. சிலுவை தியாகத்தின் சின்னம். நீங்களும் நானும் எமது பாவத்தின் விளைவால் அறையப்படவேண்டிய சிலுவையிலே அவர் அறையப்பட்டார். நீங்களும் நானும் சிந்தப்பட வேண்டிய எமது இரத்திற்குப்பதிலாக இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தை சிலுவையிலே சிந்தினார். இதனால் சிலுவை மகிமை அடைந்தது. இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளைகளாகிய எமக்கு மேன்மையும், மகிமையும், கொடுப்பது எங்களுடைய செல்வமல்ல, பதவியல்ல, அந்தஸ்துமல்ல, பட்டமுமல்ல, சிலுவை அன்பு எங்களை கவர்ந்து கொண்டதே எங்களுக்கு மகிமை.
இந்த உண்மையை அப்போஸ்த்தலரான பவுல் தமது நிருபங்களில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். (வேதப்புத்தகம் உள்ளவர்கள் பவுலின் அனைத்து நிருபங்களையும் வாசித்து இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்). நானோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றைக் குறித்து மேன்மை பாராட்டாமல் இருப்பேனாக, கலாத்தியர் 6:14. அவர் இவ்வாறு எழுதியதற்குக் காரணம், பாவம் செய்து தேவனுடைய மகிமையையும் பிரசன்னத்தையும் இழந்து வேறுபட்டு தேவனுக்குப் பகையாக வாழ்ந்த மக்களை இயேசு தமது சிலுவைமரணத்தின்மூலம் ஒப்பரவாக்கினார் என்பதற்காக, எபேசியர் 2:11-22.
இரண்டாயிரம் வருடங்களாக அதே சிலுவை பல்லாயிரக் கணக்கான மக்களை இயேசுவண்டை வழி நடத்தியிருக்கிறது. இன்றுவரை சிலுவையின் உபதேசத்தினால் ஆயிரக்கணக்கானோர் நித்திய ஜீவனை அடைந்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட சிலுவை இன்றுவரை இரட்சிப்பின் அடையாளமாக, விடுதலையின் சின்னமாக, தேவனுக்கும் மனிதனுக்கும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் அடையாளச்சின்னமாக விளங்குகிறது.
இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்திருக்காவிட்டால் சிலுவை மேன்மை யடைந்திருக்காது. மகிமையும் அடைந்திருக்காது. இயேசுவின் மரணத்தினால் சிலுவை வல்லமைபெற்றது. அந்த சிலுவையில் ஜெயமுண்டு. ஜீவனுண்டு. பாவமன்னிப்பு உண்டு. இரட்சிப்புண்டு. விடுதலையுண்டு. தெய்வீக சுகமுண்டு. சாத்தானின் சகல வல்லமைகளையும் தகர்த்தெறியக்கூடிய வல்லமை சிலுவையில் உண்டு. அதே சிலுவை உன் வாழ்க்கை முழுவதையும் மாற்றவல்லது. பாவத்தின் விளைவான நரகத்திலிரந்து உன்னைத் தப்புவித்து பரலோகத்திற்கு உன்னை வழிநடத்தும் நல்வழிகாட்டி சிலுவை மாத்திரமே. சிலுவையை நோக்கித் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்.
அன்பான அலைகள் வாசக நேயர்களே, கிறிஸ்துவின் சிலுவையைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? இயேசு ஏன் சிலுவையில் மரித்தார்? இன்று உலகம் முழுவதிலும் சிலுவை உயர்த்தப்பட்டிருப்பதன் காரணம் என்ன? இயேசுகிறிஸ்துவை ஏன் சிலுவையில் அறைந்தார்கள்? அவர் நினைத்திருந்தால் தம்மை சிலுவையில் அறைந்தவர்களை வானத்தில் இருந்து அக்கினியை வரவழைத்து சுட்டெரித்து தமது மகிமையை விளங்கச் செய்திருக்கலாம். ஆனால் இயேசு அப்படிச் செய்யவில்லை. அவர் சிலுவையில் மரிப்பது அவசியமாக இருந்தது. பாவிகளான நீயும் நானும் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் தம்முடைய சரீரத்தில் ஏற்றுக் கொண்டு நம்மை அந்த வேதனைக்கு தப்புவித்தார்.
எமக்கு பாவமன்னிப்பை அருளி எம்மை இரட்சிக்கவும், எமக்கு வாழ் வழிக்கவும், எமக்கு நித்திய ஜீவனை அளிக்கவும் அவர் சிலுவை மரணத்தை ஏற்றார். அவர் சிலுவையில் மரித்ததினால் அது அவருக்கு தோல்வியல்ல. அது மகத்தான வெற்றியாகும். சிலுவையில் அவருடைய மீட்பின் வேலை முடிந்தது. இனி அவரின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்வதும் தள்ளிவிடுவதும் உன்னைப் பொறுத்தது. உனது ஆத்துமா வாழவடைய வேண்டுமானால், உனக்கு நித்திய ஜீவன் வேண்டுமானால் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை நோக்கிப்பார். அவர் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள ஆசையாக இருக்கிறார். அந்த இரட்சிப்பை நீ இன்றே பெற்றுக் கொண்டு சிலுவையை உறுதியாகப் பற்றிக்கொள். மகிமை நிறைந்த அந்த சிலுவையை நீ பற்றிக்கொள்வாயானால் உன் ஜீவியம் முழுவதும் மகிமை நிறைந்ததாக இருக்கும்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.