ஊழல் இல்லாவிட்டால் சிறந்த கிரிக்கட் அணி

கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினர் ஊழல்களில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் செயற்பட்டிருந்தால் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் ஓய்வுபெறும்போது சிறந்த கிரிக்கட் அணியொன்றை உருவாக்கியிருக்க முடியும் என ஐ.தே.க கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு, தொழில்அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது; கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினர் ஊழல்களில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் செயற்பட்டிருந்தால் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்கள் ஓய்வுபெறும்போது சிறந்த கிரிக்கட் அணியொன்றை உருவாக்கியிருக்க முடியும்.

கிரிக்கெட் விளையாட்டை பாடசாலை மட்டத்திலிருந்து விஸ்தரிப்பத்றகு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்காக காத்துக்கொண்டிருக்காது விளையாட்டுத்துறை அமைச்சர் பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய கிரிக்கட் வீரர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளும்போது கைதட்டும் 95வீதமானவர்கள் மென்பந்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களாவர். ‘ஹார்ட்’ பந்தில் கிரிக்கெட் விளையாடக்கூடிய வீரர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இம்முறை நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை பங்குபற்ற முடியாது போய்விட்டாலும், அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்காகவாவது அணியை தயார்ப்படுத்துவதற்கு கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts