நீ ஹீரோதானே. ஏன் காமெடியன் மாதிரி பேசுறே? ஏன் மனோபாலா மாதிரி பேசுறே?’ என்று இளையராஜா நடிகர் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார்.
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்கிற இளையராஜாவுக்குப் பாராட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.
இந்த விழா, தனியா சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் கார்த்திக் மேடையேறிப் பேசினார். அப்போது மனோபாலாவும் வந்தார்.
” ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு ஹீரோயின் உட்பட எல்லோரையும் தேர்வு செய்துவிட்டார் டைரக்டர் பாரதிராஜா சார். ஹீரோ மட்டும் சரியாக அமையவில்லை. அந்த சமயத்தில், உட்லண்ட்ஸில் காபி சாப்பிட்டுவிட்டு, போய்க்கொண்டிருக்கும் போது கார் பஞ்சராகிவிட்டது. எப்படியும் ஒருமணி நேரத்துக்கும் மேலே ஆகிவிடும் என்று சொல்லப்பட்டது.
நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு எதிரே நடிகர் முத்துராமன் வீடு. அங்கே அவரது மகன் முரளி விளையாடிக் கொண்டிருந்தார். பாரதிராஜா சார் ‘அது யார் வீடு, அந்தப் பையன் யாரு?’ என்று கேட்டார். ‘முத்துராமன் சார் வீடு. அவரோட பையன்’ என்று சொன்னேன்.
அப்புறம் முத்துராமனிடம் பேசி, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்துக்கு முரளியை புக் பண்ணி, கார்த்திக்காக்கினோம்” என்றார்.
அந்த சமயத்தில், நடிகர் கார்த்திக், நடுநடுவே காமெடியாகப் பேசிக்கொண்டே இருந்தார்.
பிறகு இளையராஜாவிடம் ‘உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும் சார்’ என்றார் கார்த்திக். ‘நான் உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கணும். ஆமாம், நானும் அப்ப இருந்தே பாத்துக்கிட்டிருக்கேன். நீ ஏன் காமெடியன் மாதிரி பேசிக்கிட்டிருக்கே? நீ ஹீரோதானே. அப்புறம் ஏன் காமெடியன் மாதிரி பேசுறே? மனோபாலா மாதிரி பேசுறே?’ என்று இளையராஜா கேட்டார்.
இதைக்கேட்டதும் எல்லோரும் கை தட்டி ரசித்தார்கள்.
‘காமெடி பண்றதுதான் சார் கஷ்டம்’ என்றார் கார்த்திக்.
உடனே இளையராஜா, ‘அவ்ளோ கஷ்டப்பட்டு ஏன் இப்படிப் பேசிட்டிருக்கே?’ என்றார்.
மீண்டும் கை தட்டி எல்லோரும் சிரித்தார்கள்.