பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் இலங்கை மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் ஒரணியில் செயற்படுவது தொடர்பாக நேற்றிரவு ஜெனிவாவில் தீவிரமாக ஆராயப்பட்டது.
ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக இங்கு வந்துள்ள இலங்கை தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேச மேடையிலும் ஐ.நா. மேடையிலும் ஒரு அணியாக எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராயப்பட்டது.
இதற்காக பொது வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது தொடர்பாக இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன், மற்றும் சிவாலிங்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் அதன் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் பிரித்தானிய தமிழ் பேரவையின் பிரதிநிதி ரவிக்குமார், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி அருட்தந்தை இமானுவேல் தமிழர் மரபுரிமை பேரவையின் பிரதிநிதி நவநீதன் மற்றும் வட அமெரிக்க தமிழ் அரசியல் பேரவை, தமிழர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.