ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர்.
சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார். இப்போது கதாநாயகிகளும் காதல், டூயட்களில் இருந்து விடுபட்டு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வில்லி வேடங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
வில்லிக்குத்தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர். வில்லத்தனத்துக்கு முன்னோடியாக இருப்பவர் ரம்யாகிருஷ்ணன், படையப்பா படத்தில் மிரட்டி இருந்தார். இப்போதுள்ள கதாநாயகிகளிடம் உங்கள் கனவு கதாபாத்திரம் என்ன என்று கேட்டால் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி மாதிரி வேடம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
காஜல் அகர்வால் இதுபோல் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். அவர் கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. தேஜா இயக்கும் சீதா தெலுங்கு படத்தில் காஜல் அகர்வாலுக்கு எதிர்மறை கதாபாத்திரம். ஏற்கனவே நயன்தாரா கோலமாவு கோகிலாவில் கஞ்சா விற்று எதிரிகளை கொலை செய்யும் வில்லியாக மிரட்டினார்.
திரிஷா கொடி படத்தில் அரசியல் கொலைகள் செய்யும் வில்லியாக வந்தார். சமந்தாவின் யூடர்ன் படத்தில் பூமிகா, சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் சிம்ரன் ஆகியோர் வில்லிகளாக நடித்தனர். அனுஷ்கா, பாகமதி படத்தில் எதிர்மறை வேடம் ஏற்றார். வரலட்சுமி சரத்குமார் சண்டக்கோழி-2, சர்கார் படங்களில் வில்லியாக வந்தார். தொடர்ந்து அதுமாதிரி கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
சூப்பர் டீலக்ஸ் தமிழ் படத்தில் சமந்தாவுக்கு வில்லத்தனமான சாயல் இருப்பதை டிரெய்லர் உணர்த்தியது. தேவி-2 படத்திலும் தெலுங்கு படமொன்றிலும் தமன்னா வில்லியாக வருகிறார்.