தமிழக காங்கிரஸ் சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு காங்கிரஸ் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் 9 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நேற்று வரை இழுபறி நீடித்து வந்தது.
வேட்பாளர்களுக்காகத் தொகுதியை வாங்கி வைத்து பின்னர் எதிரணியினர் பலமான வேட்பாளரை நிறுத்தியதும் அதற்காக தங்கள் வேட்பாளரை மாற்றுவதா என்ற குழப்பத்திலேயே இழுபறி நீடித்தது.
காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார், அதே போன்று அவரது அணியில் உள்ள குஷ்புவும் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் காங்கிரஸில் அவர்களுக்கு எதிரானவர்கள் கை ஓங்கியதால் இருவருக்கும் முதலில் தொகுதி இல்லை என்ற தகவல் வெளியானது. காங்கிரஸ் சார்பில் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும் தேனியில் ஹாருனும் விருதுநகரில் மாணிக் தாக்குரும், திருச்சியில் திருநாவுக்கரசரும், கரூரில் ஜோதிமணியும் கிருஷ்ணகிரியில் டாக்டர் செல்லகுமாரும் திருவள்ளூரில் செல்வ பெருந்தகையும் கன்னியாகுமரியில் ராபர்ட் புரூசும் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனும் குஷ்புவும் போட்டியிட இடமில்லாமல் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற கருத்து எழுந்தது.
ஆனாலும் அதிகாரபூர்வமாக பட்டியல் அறிவிக்கப் படாததால் யாருக்கு எந்தத் தொகுதி என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார் என்றவுடன் அந்தத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியது, இதனிடையே டிடிவி தினகரன், தங்கத் தமிழ்ச்செல்வனை அங்கு வேட்பாளராக அறிவித்தவுடன் தொகுதி நிலையே தலைகீழாக மாறிப்போனது, இதனால் அதிமுக அமமுக இடையே நம்முடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் உடல் நிலையைக் காரணம் காட்டி ஹாருன் விலகியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
அமமுக, அதிமுக போட்டியினடையே இன்னொரு நட்சத்திர வேட்பாளர் இளங்கோவன் எளிதாக காங்கிரஸ் நம்புகிறது. தனக்கு இடம் கிடைக்காவிட்டாலும் தன்னுடைய அரசியல் வழிகாட்டியான இளங்கோவனுக்கு இடம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்துள்ள குஷ்பு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “தன்மானத் தலைவர் இளங்கோவன் சாருக்கு வாழ்த்துக்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த மற்ற சகாக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி… பிரச்சாரத்தில் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளிப்பேன். திமுக-காங்கிரஸ் சூப்பர் வெற்றி” என்று கூறியுள்ளார்.