போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்கின்ற வேலையையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன், அரசாங்கம் பொய் உரைப்பதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் கூட்டமைப்பினர் இப்போது கூறுவது வேடிக்கையானது என்றும் சாடியுள்ளார்.
யாழ். சுழிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று சனிக்கிழமை காலை நடாத்திய ஊடகவியியலாளர் மாநாட்டின் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையே இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கின்ற நிலையில் மேலும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மறுக்கப்படுவது போன்றதாகவே பார்க்கப்படுகின்றன. ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்திருக்கின்றனர்.
ஆனாலும் தமிழ் மக்களுக்காகச் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் இலங்கை அரசாங்கத்தை விடுவித்து அவர்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அது மாத்திரமல்லாமல் சர்வதேசத்தின் பிடியில் இருந்து இலங்கை அரசைப் பிணை எடுக்கின்ற வேலைகளையே கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர். இதனை ஒட்டு மொத்த தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
தமிழ் மக்கள் நீதியைக் கேட்டு போராடி வருகின்ற போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலே செயற்பட்டு வருவது தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலைமையில் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பொய் சொல்வதாகவும் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் இப்பொழுது கூட்டமைப்பினர் கூறுகின்றமை வேடிக்கையானது.