தமிழர் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினரும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவருமான சுமந்திரனை கொல்வதற்கு பாதாள உலகக் குழுவிடம் உதவி நாடப்பட்டதாக இலங்கையில் உள்ள சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனீவா சென்று போர்க்குற்றம் குறித்து பேச முன்னர் அவரை கொல்ல முயற்சி எடுக்கப்பட்டதாகவும் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
சில காலத்திற்கு முன்னர் : அதாவது.. 2016 – 2017 காலப்பகுதியில்..
முன்னாள் போராளிகள் சிலரை பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல் மூலம் சுமந்திரனை கொல்ல நான்கு தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அவை வெற்றி பெறவில்லை என்றும் எழுதியுள்ளது.
இதற்கு பின்னால் புலம் பெயர் புலிகளை சேர்ந்த நோர்வே நபர் ஒருவர் இருந்தாக கைதானவர்கள் கூறியதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டனர் என்பதும் பழைய செய்தியாகும்.
ஆனால் இப்போதோ பாதாள உலகக் குழுவை பயன்படுத்தி சுமந்திரனை கொல்ல மீண்டும் ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதாகவும் சிங்கள பத்திரிகை கூறுகிறது.
பாதாள உலகக் கோஷ்டியை சேர்ந்த மகிழன்கமுவ சஞ்சீவ என்பவர் மூலமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இவரை சிறையில் வைத்து இந்த முயச்சியின் இலங்கை சூத்திரதாரியாக இருந்த தமிழர் ஒருவர் சந்தித்துள்ளார்.
இலங்கையில் வாழும் வேந்திரன் என்ற பெயர் கொண்டவர் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நபராகும்.
இந்த வேந்திரன் கைதாகி சிறையில் இருந்த வேளையில் பாதாள உலகக் குழுவாகிய சமையன் குழுவை சேர்ந்த அஸங்க என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி அதன் மூலமாக மகிழன் கமுகவை தொடர்பு கொண்டனர். இவரே சுமந்திரனை கொல்ல ஏவப்பட்ட கூலிக் கொலையாளி.
இதன் பின் இவர்கள் விடுதலையாகி பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். சமீபத்தில் வேந்திரன் உட்பட எட்டுப்பேரை ஆயுதங்களுடன் வெயாங்கொடையில் கைது செய்தது இலங்கைப் போலீஸ்.
பின்னர் அவர்களை விசாரித்த போது பிரான்சிலும் சுவிசிலும் உள்ள சிலர் அவர்களுக்கு பணம் கொடுத்து ஜெனீவா வரமுன்னர் சுமந்திரனை தீர்த்துக்கட்ட முயன்றனர் என்று போலீசாருக்கு வாக்குமூலமளித்தனர் என்று சிங்களப்பத்திரிகை எழுதியுள்ளது.
இது இன்றைய காலைக்கதிரில் வெளியான செய்தியாகும்.
ஆனால் இந்த செய்தி பழைய லங்காபுவத் செய்தி போல இருப்பதாக இன்னும் சிலர் கூறுகிறார்கள்.
அலைகள் 24.03.2019