படப்பிடிப்பு ஓய்வு நேரத்தை கழிக்க ரூ. 7 கோடி செலவில் ஹீரோ உருவாக்கும் சொகுசு வேன்
படப்பிடிப்பு ஓய்வு நேரத்தை கழிக்க ரூ. 7 கோடி செலவில் ஹீரோ உருவாக்கும் சொகுசு வேன் 3/26/2019 2:30:25 PM
திரைப்பட நட்சத்திரங்கள் வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்படுகின்றனர். இதே வசதியை படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் நட்சத்திரங்கள் எதிர்பார்ப்பதால் ஏசி வசதியுடன் கூடிய கேரவன் அதாவது சொகுசு வேன்கள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
அதற்கு ஒரு நாளைக்கு குறைந்த பட்ச வாடகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் தங்களுக்கென சொந்தமாக சொகுசு கேரவன் வைத்திருக்கின்றனர். கோலிவுட்டில் ஹீரோக்கள் யாரும் அதுபோல் சொந்தமாக கேரவன் வைத்திருப்பதில்லை.
டோலிவுட்டில் தற்போது சில ஹீரோக்கள் சொந்தமாக கேரவன் வாங்கி வைத்திருக்கின்றனர். நடிகர் மகேஷ்பாபு பழைய பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி அதை ஏசி வசதி யுடன் கூடிய ஆடம்பர சொகுசு பஸ்ஸாக மாற்றி படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு எடுத்துச் சென்று அதில் தங்கி நடித்து வருகிறார். இது சுவாரஸ்யமாக பேசப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு ஹீரோ ரூ. 7 கோடி செலவில் சொகுசு கேரவன் உருவாக்கியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும், தமிழ்-தெலுங்கில் உருவான ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ படத்தில் நடித்தவருமான அல்லு அர்ஜுன் இப்போதைக்கு டாக் ஆப் த டவுன் ஆகியிருக்கிறார். சமீபத்தில் இவர் ரூ. 2 முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான பஸ் ஒன்றை வாங்கினார்.
அதை சர்வதேச தரத்திற்கு ஈடாக சொகுசு கேரவனாக மாற்றுகிறார். இதற்காக ரூ. 5 கோடி செலவு செய்கிறார். இயக்குனர் திரிவிக்ரம் படத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அந்த படப்பிடிப்பில் ஓய்வு நேரத்தில் தங்குவதற்காக ரூ. 7 கோடி மதிப்பில் மாறுதல் செய்யப்பட்ட ஆடம்பர சொகுசு கேரவனில் தங்கி நடிக்க உள்ளார். அல்லு அர்ஜுனைபோல் மேலும் சில நடிகர்களும் சொந்தமாக கேரவன் வாங்கி பயன்படுத்த உள்ளார்களாம்.