காணாமற்போனோரின் குடும்பத்தாருக்கு 6ஆயிரம் ரூபா கொடுக்க எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை வரவற்கின்றேன்என்று கூறிய த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளின் குடும்பத்தாருக்கும் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வீதம் கொடுக்க வேண்டுமென்றும் நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27)இடம்பெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காணாமற்போனோரின் குடும்பத்தாருக்கு 6ஆயிரம் ரூபா கொடுக்க எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை வரவற்கின்றேன். அதேபோன்று சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளின் குடும்பத்தாருக்கும் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வீதம் கொடுக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கு, கிழக்கில் 89ஆயிரம் விதவைகள் இருப்பதாக கூறுகின்றனர் அவர்களுடன் முன்னாள் போராளிகளின் மனைவிகள் மற்றும் கணவனை பிரிந்து வாழும் சுமார் 50ஆயிரம் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
என்டர் பிரைஸ் சிறிலங்கா மூலம் வடக்கு, கிழக்கு பெண்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும். யுத்தம் முடிவுக்கு வரும்வரை வடக்கு, கிழக்கிலுள்ள பெண்கள் யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியாக வாழும் ஒரு நிலை இருந்தது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கு, கிழக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது.
இதனால் சமூக சீரழிவுகள் அங்கு அதிகரித்துள்ளன. தாய்மார் தமது பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்ல அஞ்சும் நிலை அங்கு உள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்னும் போதுமானளவு வசதிகள் இல்லை. இதனால் நோயாளிகள் பாரிய சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே அமைச்சர் அம்மாவட்ட வைத்திய அதிகாரிகளை சந்துத்து அவர்களது தேவைகளை நிறைவேற்றித் தரவேண்டும்என்று அவர் கூறினார்.