தேர்தல் பிரச்சாரத்தின்போது மதிமுக தலைவர் வைகோவை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாகச் சாடினார்.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் ராவணனை ஆதரித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், ”விழுப்புரத்தில் வைகோ பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். தன் இஷ்டம் போலக் கொள்கைகளையும் மாற்றிக்கொள்வார்; நிலைப்பாட்டையும் மாற்றுவார். அந்தக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகிப் போய்விட்டது.
பருப்பு கொள்முதலில் ஊழல், நெடுஞ்சாலையில் ஊழல் என எந்தெந்தத் துறைகள் எல்லாம் நியாபகத்துக்கு வந்ததோ, அவை அனைத்தையும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். ஏற்கெனவே ஒன்றுமில்லை. இவ்வளவு தரம் தாழ்ந்து, ஒரு கட்சியை வைத்துக்கொண்டே அடுத்த கட்சியின் சின்னத்தில் நிற்கிறார்கள். இவரெல்லாம் ஒரு தலைவரா?
மதிமுகவில் உள்ள மவைத் தூக்கிவிட்டு, திமுகவையே வைத்துக்கொள்ளலாமே! இவர்களெல்லாம் கூட்டணிக்கட்சி. இவர்களுக்கு கொள்கையாவது, கத்தரிக்காயாவது? நாட்டு மக்கள், தொண்டரைக் குறித்து இவர்களுக்குக் கவலை இல்லை. பதவி வெறிதான் காரணம்.
ஈரோட்டில் கணேசமூர்த்தி மதிமுக மேடையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்கிறார். முதலில் நீங்கள் கட்சி நடத்துங்கள். பிறகு அடுத்தவருக்காகப் பேசுங்கள். சொந்தக் கட்சியை அடமானம் வைத்துவிட்டுப் பேச உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?
கூட்டணிக்காகக் கொள்கையை விட்டுவிட்டார். கொள்கையும் கிடையாது; கோட்பாடும் கிடையாது.
இலங்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த வைகோ இப்போது அதை விட்டுவிட்டார். இலங்கைத் தமிழர் படுகொலை பற்றி வாய் கிழியப் பேசிய வைகோ, இப்போது கைகட்டி, வாய்பொத்தி திமுக தலைவரிடம் சரணாகதி அடைந்துவிட்டார். இதைவிட வேறென்ன கேவலம் வேண்டும்?” என்றார் பழனிசாமி.