நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாத்திரம் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பேதமின்றி வளங்களை பெற்றுக்கொடுத்து அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமையை வழங்குவதற்காகவே ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை ஹதரஎல சீவலி முன்மாதிரி கனிஷ்ட பாடசாலையின் 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று (29) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பாடசாலையின் ஆசிரியர் விடுதியையும் கலையரங்கத்தையும் இதன்போது ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இன்று முற்பகல் கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்
வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் ”அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை கதுருவெல நகர மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 03 மாடி வகுப்பறை கட்டிடத்தையும் இன்று ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.
பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, மாணவர்களின் நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் நூலகங்களுக்கான நூல்களை வழங்குதல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டு உறுதி பத்திரங்களை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து பொலன்னறுவை தோப்பாவெவ மகா வித்தியாலயத்தின் 03 மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த 03 மாடி வகுப்பறை கட்டிடம் பாடசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார். மேலும் அப்பாடசாலையின் மாணவர்களின் திறமைகளையும் ஜனாதிபதி அவர்கள் கண்டு கழித்ததுடன், அவர்களுடன் இணைந்து பாடலொன்றையும் பாடினார்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தோப்பாவெவ மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்ற வகையில் தனது கடந்த கால அனுபவங்கள் சிலவற்றையும் அம்மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார். சிறந்த சமூகம் ஒன்றையும் சிறந்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு தண்டனைகள் அவசியம் என்பதாலேயே போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரணதண்டனை வழங்குவதற்கு தான் தீர்மானித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.