தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெகுசிலரே தனித்துவமான தெரிவார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். தனது தனித்துவமான இயக்கத்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் மகேந்திரன் என்றால் மிகையல்ல. முள்ளும் மலரும் படம் மூலம் ரஜினிக்கு திருப்புமுனை தந்த இயக்குநரும் இவர். உடல்நலக்குறைவால் மறைந்த இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் கடந்து வந்த முற்களையும் மலர்ந்த மலர்களையும் சற்றே திரும்பி பார்ப்போம்….
ஆரம்பகால வாழ்க்கை
மகேந்திரனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி. இவரது இயற்பெயர் ஜே.அலெக்ஸாண்டர். 1939ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, ஜோசப் செல்லையா – மனோன்மணி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் உள்ள பள்ளியிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை, அமெரிக்கன் கல்லூரியிலும், அதைத்தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் முடித்தார்.
எம்ஜிஆர்., தந்த அடையாளம்
1958ம் ஆண்டு அழகப்பா கல்லூரியின் ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆர், முன்னிலையில் நடந்த சினிமா என்ற தலைப்பில் மகேந்திரன் பேசிய பேச்சு எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவையுடன் கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம், சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர். வாழ்க என்று எம்.ஜி.ஆரின் பாராட்டைப் பெற்றார்.
அடித்தளமிட்ட நாம் மூவர்
பின்னர் எம்.ஜி.ஆர். மூலம் அறிமுகமான பாலன் பிக்சர்ஸ் உரிமையாளரான முசு.பாலன், மகேந்திரனின் கதை ஒன்றை வைத்து, நாம் மூவர் என்ற படத்தை எடுத்தார். ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜம்பு இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது மட்டுமல்லாமல், மகேந்திரனின் சினிமா பயணத்திறக்கும் வித்திட்டது. தொடர்ந்து சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை, நிறை குடம், திருடி, தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம், மோகம் முப்பது வருஷம், வாழ்ந்து காட்டுகிறேன், வாழ்வு என் பக்கம், ரிஷி மூலம் போன்ற படங்களுக்கு கதை மற்றும் திரைக்கதை, வசனம் எழுதி வெற்றி கண்டார்.
இயக்குநர் அவதாரம்
மகேந்திரன் இயக்கிய முதல்படம் முள்ளும் மலரும். ரஜினிகாந்த், சரத்பாபு, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரஜினிக்கு சினிமாவில் திருப்புமுனை தந்த படமாகவும் அமைந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிற்கு பாலுமகேந்திரா என்ற அற்புதமான ஒளிப்பதிவாளரையும் அறிமுகப்படுத்திய பெருமை மகேந்திரனைச் சேரும்.
தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள்
இதையடுத்து, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் நாவலான சிற்றன்னையை உதிரிப்பூக்கள் என்ற பெயரில் படமாக எடுத்தார். பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் இல்லாமல் விஜயன், அஸ்வின், மதுமாலினி போன்று அன்றைய இளம் நடிகர்களை வைத்து வெற்றி கண்டு, தான் ஒரு மிகச்சிறந்த இயக்குநர் என்பதை ஆணித்தரமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பதிய வைத்தார். இத்திரைப்படத்திலும் அசோக்குமார் என்ற ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளரை தமிழ் திரையுலகிற்கு தந்து பெருமை சேர்த்தார். தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, கை கொடுக்கும் கை போன்ற அற்புதமான படைப்புகளை தந்தார். கடைசியாக 2006ம் ஆண்டு சாசனம் என்ற படத்தை இயக்கினார்.
நடிப்பிலும் ஜொலித்தவர்
அதன்பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து நிமிர், மிஸ்டர் சந்திரமவுலி, சீதக்காதி, பேட்ட பூமராங் போன்ற படங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.
சின்னத்திரை
வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் அர்த்தம், காட்டுப்பூக்கள் போன்ற தொடர்களை இயக்கி உள்ளார்.
மகேந்திரன் கதை, வசனம் எழுதிய படங்கள்.
நாம் மூவர் – கதை.
சபாஷ் தம்பி – கதை.
பணக்காரப்பிள்ளை – கதை.
நிறை குடம் – கதை.
தையல்காரன் – கதை
திருடி – கதை.
மோகம் முப்பது வருஷம் – கதை, வசனம்.
ஆடு புலி ஆட்டம் – கதை, வசனம்.
வாழ்ந்து காட்டுகிறேன் – கதை, வசனம்
காளி – கதை, வசனம்
வாழ்வு என் பக்கம் – கதை, வசனம்
ரிஷிமூலம் – கதை, வசனம்.,
பருவமழை – வசனம்
பகலில் ஒரு இரவு – வசனம்.
அவளுக்கு ஆயிரம் கண்கள் – கதை, வசனம்
கள்ளழகர் – வசனம்
சக்கரவர்த்தி – கதை, வசனம்
கங்கா – கதை
ஹிட்லர் உமாநாத் – கதை
நாங்கள் – திரைக்கதை வசனம்
சேலஞ் ராமுடு (தெலுங்கு) – கதை
தொட்டதெல்லாம் பொன்னாகும் (தெலுங்கு) – கதை
சொந்தமடி நீ எனக்கு – கதை, வசனம்
அழகிய பூவே – திரைக்கதை, வசனம்
நம்பிக்கை நட்சத்திரம் – கதை, வசனம்
மகேந்திரன் எழுதி இயக்கிய படங்கள்
01. முள்ளும் மலரும்
02. உதிரிப் பூக்கள்
03. பூட்டாத பூட்டுக்கள்
04. ஜானி
05. நெஞ்சத்தைக் கிள்ளாதே
06. மெட்டி
07. நண்டு
08. கண்ணுக்கு மை எழுது
09. அழகிய கண்ணே
10. ஊர்ப்பஞ்சாயத்து 11.
கை கொடுக்கும் கை
12. சாசனம்
சின்னத்திரை
01. அர்த்தம் (தொலைக்காட்சி)
02. காட்டுப் பூக்கள் (தொலைக்காட்சி)