கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறுகிறது.
மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியத் தேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்ய கரிகாலன், குந்தவை, பூங்குழலி, வானதி, நந்தினி உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு நடந்தது. தற்போது இதில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
நாவலில் நந்தினி கதாபாத்திரம் பல்வேறு வேடங்களில் மோசடிகள் செய்யும் பேரழகியான வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருக் கும். இந்த கதாபாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யாராயை விதவிதமான உடைகளில் கவர்ச்சியாக பார்க்கலாம்.
‘பொன்னியின் செல்வன்’ பெரிய நாவல் என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. எனவே தெலுங்கில் வெளியான பாகுபலியைபோல் இரண்டு பாகங்களாக இந்த படத்தை உருவாக்கலாமா என்று மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.
இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. படத்தில் நடிக்க உள்ள அனைவரையும் மணிரத்னம் விரைவில் சென்னைக்கு அழைத்து ஒரே இடத்தில் உட்கார வைத்து அவரவரின் வசனத்தை பேச வைக்க இருக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.