அறந்தாங்கியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அழியாநிலை பிரிவு சாலை பகுதியில் 1998-ல் பெரியாருக்கு முழு உருவ சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டது. அப்போது இந்த சிலையை திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த சிலையின் தலையை மர்ம நபர்கள் நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரியார் சிலை உடைப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியாரின் உருவச் சிலையின் தலையை சமூக விரோதிகள் சிலர் துண்டித்துள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது.
அறந்தாங்கியில் பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.