நான் ஒரு போராளி! மம்தாவின் வாழ்க்கைக் கதை!

விதியை சில நேரங்களில் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.திரைப்பட வாய்ப்புக்காக கோடிக்கணக்கானவர்கள் தவம் கிடக்க, அப்படி ஓர் எண்ணமேயில்லாதவரைத் தேடிவந்து வாய்ப்பு கதவினைத் தட்டியது என்றால் வேறென்ன சொல்வது? மம்தா மோகன்தாஸ் நடிகை ஆனது யதேச்சையாக நடந்தது.மலையாளத் திரையுலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரிஹரன். பிரேம் நசீர், மம்முட்டி, மோகன்லால் என்று மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்கள் அத்தனை பேரையும் இயக்கியிருப்பவர். மலையாளத்தின் மகத்தான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகளை சினிமா ஆக்குவதில் பெரும் ஆர்வம் காட்டுபவர்.

இடையில் சுமார் ஆறு ஆண்டு காலம் படம் இயக்காமல் இருந்த ஹரிஹரன் ஒரு படமெடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அது குறித்த யோசனையில் இருந்தார். யதேச்சையாக மறைந்த நடிகை மோனிஷாவின் அம்மா ஸ்ரீதேவி உண்ணியை அப்போது சந்தித்தார். மோனிஷாவை நினைவிருக்கிறது இல்லையா. தமிழில்கூட கார்த்திக்கோடு ‘உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’ படத்தில் நடித்தாரே. அவரேதான்.
“மோனிஷா இருந்திருந்தா அவதான் என் படத்து ஹீரோயின். அந்தமாதிரி ஒரு முகவெட்டு இருக்கிற பொண்ணை தேடிக்கிட்டிருக்கேன்” என்றார் ஹரிஹரன்.

ஸ்ரீதேவி உண்ணிக்கு சட்டென்று ஃப்ளாஷ் அடித்தது. சில நாட்களுக்கு முன்பாகத்தான் ஒரு கல்யாண ரிசப்ஷனில் ஒரு பெண்ணை பார்த்திருந்தார். “ரொம்ப அழகா என்னோட பொண்ணு மாதிரியே இருக்கேம்மா” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.
அந்தப் பெண்ணையே இந்த படத்துக்கு சிபாரிசு செய்தால் என்ன? ஹரிஹரனிடம் சொன்னார். “வந்து பார்க்கச் சொல்லு. ஓக்கேன்னா நடிக்க வெச்சிடலாம்” என்று அவரும் பாசிட்டிவ்வாகவே பதில் சொன்னார். அப்படித்தான் சினிமாவுக்கு வந்தார் மம்தா.அவர் நடித்து 2005ல் வெளிவந்த முதல் படமான ‘மாயூகம்’ பெரிய ஹிட் இல்லை. ஆனாலும் மம்தாவின் திறமை என்னவென்று பறைசாற்றக்கூடிய அளவுக்கு அமைந்திருந்தது.

மம்தா பிறந்து வளர்ந்ததெல்லாம் மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில். 1984, நவம்பர் 14 அன்று பிறந்தார். அப்பா பேங்கர். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தன் மகளுக்கு நாட்டியம், இசை என்று பாரம்பரிய கலைகளைக் கற்றுத் தருவதில் எந்த குறையும் வைக்கவில்லை அவரது பெற்றோர். அங்கிருந்த இந்தியப் பள்ளி ஒன்றில் படித்தார். ஹிந்துஸ்தானி, கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி. அருமையாக பரதநாட்டியம் ஆடுவார். 1000 சிசி ஹோண்டா மோட்டார் பைக்கை அனாயாசமான வேகத்தில் ஓட்டுவார். கிராண்ட்ப்ரீ மற்றும் எஃப்1 போட்டிகளில் கலந்துகொள்ள ஆசை. நீச்சல் அடிக்கப் பிடிக்கும். பேஸ்கட்பால் வீராங்கனை. இப்படியாக சிறுவயதிலேயே பன்முகத்திறமைகள் மம்தாவிடம் ஏராளமாக நிறைந்திருந்தன.

கல்லூரிப் படிப்புக்காக பெங்களூர் வந்தார். விளையாட்டாக கல்லூரி அளவிலான அழகிப் போட்டிகளிலும் கலந்து கொண்டார். இதையடுத்து மாடலிங் வாய்ப்புகள் குவிந்தன. ஐ.பி.எம். நிறுவனத்துக்கெல்லாம் கூட மாடலாக இருந்திருக்கிறார். ஃபேஷன் ஷோக்களில் ‘ராம்ப் வாக்’ நடந்தார். இதெல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காகத்தான். சினிமா, நடிப்பு மாதிரி மம்தாவுக்கு அப்போது பெரியதாக அபிப்ராயம் எதுவுமில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த குறிக்கோளும் இல்லை.விடுமுறைக்காக சொந்த ஊரான கேரளாவுக்கு வந்திருந்த போதுதான் அந்த கல்யாண ரிசப்ஷன், ஸ்ரீதேவி உண்ணி, ஹரிஹரன், மாயூகம் சம்பவம் நடந்தது.

சினிமாவில் நடிப்பதையும் மகிழ்ச்சிக்காகத்தான் செய்தார். ஒருவேளை இத்துறையில் மகிழ்ச்சி கிடைக்காவிட்டால் உடனே விலகிவிடும் மனோபாவம் அவருக்கு இருந்தது. பிரபலம், பணம் எல்லாம் மம்தாவுக்கு ஒரு பொருட்டே அல்ல. யார் இதையெல்லாம் சட்டையே செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் இதெல்லாம் குவியும் என்பதே அவற்றின் தன்மை.அந்த ஆண்டே அடுத்தடுத்து மூன்று படங்கள் மலையாளத்தில் அவர் நடித்து வெளிவந்தன. மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என்று பெரிய ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அடுத்த ஆண்டே தமிழிலும் விஷால் நடித்த ‘சிவப்பதி காரம்’ மூலம் அறிமுகமானார்.

இவருடைய குரல் வளத்தை பார்த்து அசந்த இசையமைப்பாளர் தேவிபிரசாத் தெலுங்கில் பாடவைத்தார். ஜூனியர் என்.டி.ஆரின் ‘ராக்கி’ படத்தில் தேவிபிரசாத்தோடு இணைந்து பாடிய ‘ராக்கி ராக்கி’ சூப்பர் டூப்பர்ஹிட். சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்பேர் விருதுகூட அந்தப் பாடலுக்காக மம்தாவுக்கு கிடைத்தது. இதுதான் சினிமாவில் அவர் பெற்ற முதல் விருது. தொடர்ந்து இவரை தங்கள் படங்களில் பாடச்சொல்லி கேட்டார்கள் தென்னிந்தியாவின் பெரிய நடிகர்கள். விஜய் நடித்த ‘வில்லு’ படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ‘டாடி மம்மி வீட்டில் இல்ல…’ கூட மம்தா பாடியதுதான். 2007ல் தெலுங்கில் நடிப்பிலும் என்ட்ரி. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘யமதொங்கா’வில் (ராஜமவுலி இயக்கம்) செகண்ட் ஹீரோயின்.

நடித்ததோடு மட்டு மில்லாமல் ஜூனியர் என்.டி.ஆரோடு இணைந்து பின்னணியும் பாடினார். இதையடுத்து தெலுங்கில் கைநிறைய படங்கள் இவரது கால்ஷீட்டுக்காக தவம் இருக்கத் தொடங்கின. நடிப்பு, பாடல் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, 2010ஆம் ஆண்டுதான் அவருடைய மாற்றத்தை எல்லோரும் உணரத் தொடங்கினார்கள். முகத்தில் லேசான சோகம் அப்பி யிருந்தது திரையில் தெரிந்தது. அவருடைய ஹேர்ஸ்டைல் மாறியிருந்தது. சில படங்களில் ‘விக்’ வைத்தும் நடித்துக் கொண்டிருந்தார். பிருத்விராஜோடு அவர் நடித்துக் கொண்டிருந்த ‘அன்வர்’ திரைப்படத்தின்போதுதான் அந்தச் செய்தி வெளிவந்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மம்தாவுக்கு கேன்சர்.கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது முடி நிறைய கொட்டும். அதனால்தான் கேன்சர் நோயாளிகள் அப்போது மொட்டை அடித்துக் கொள்வார்கள். எனவேதான் மம்தா விக் வைத்து நடித்துக் கொண்டிருந்தார்.உயிருக்குப் போராடி மருத்துவ சிகிச்சையின் கீழ் இருக்கும் நடிகை ஒருவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே ஹீரோக்களோடு டூயட்டுக்காக நடனம் ஆடிக்கொண்டு, துள்ளலான பாடல்களை பின்னணியாக பாடிக்கொண்டிருக்கிறார் என்பதை யாராலுமே நம்பமுடியவில்லை.

“எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் எதற்குமே நான் கவலைப்பட்டதில்லை. பயம் என்கிற சொல்லுக்கே என் அகராதியில் அர்த்தமில்லை. முதன்முறையாக எனக்கு ‘கேன்சர்’ என்று தெரிந்தபோதுதான் அச்சமடைந்தேன். முற்றிலுமாக நிலைகுலைந்தேன். இதுபோன்ற சூழல்களில்தான் பாசிட்டிவ்வாக இருக்கவேண்டும் என்று வார்த்தைகளில் சொல்லிவிடலாம். ஆனால் உயிருக்குப் போராடும் தருணத்தில் அப்படி யெல்லாம் இருக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன். இதைப்பற்றி யாருக்கும் தெரியாது. வழக்கம்போல என்னுடன் நடிப்பு, இசை என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். எதுவுமே என்னுடைய மூளையில் ஏறாது.வீட்டையே மருத்துவமனையாக மாற்றிக்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிடுவேன், தூங்குவேன், எழுந்து கொள்வேன். மீண்டும் சாப்பாடு, தூக்கம் இப்படியே அந்த நாட்கள் கழிந்தன. அம்மாவைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை.”

இவ்வாறாக தன்னுடைய கேன்சர் நாட்களை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்தார் மம்தா. தான் பிறந்தபோது எப்படி தாங்கினார்களோ, அப்படியே இருபத்தாறு வயதிலும் தன்னை குழந்தையாக அம்மாவும், அப்பாவும் தாங்கினார்கள் என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். மம்தாவால் எப்படி சும்மா இருக்க முடியும்? மிக விரைவாக மருத்துவ உலகமே ஆச்சரியப்படும்படியாக மீண்டெழுந்தார். இடையில் 2011ல் தன்னுடைய சிறுவயது பஹ்ரைன் நண்பரை திருமணமும் செய்துகொண்டார். ஏனோ அடுத்த ஆண்டே அந்த விவாகரத்தும் நடந்துவிட்டது. இந்த சொந்த வாழ்க்கை சோகம் எவ்வகையிலும் தன்னுடைய கேரியரை பாதிக்காத மாதிரி பார்த்துக் கொண்டதுதான் மம்தாவின் சாமர்த்தியம்.

கேன்சரிலிருந்து மீண்டு கொண்டிருப்பதாகக் கருதிக்கொண்டிருந்த நிலையில் 2013ல் மீண்டும் அந்நோய் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. மீண்டும் சிகிச்சை. மீண்டும் மீண்டு வந்தார்.உயிர்க்கொல்லி நோயோடு போராடிக் கொண்டே, திருமண வாழ்க்கையும் முறிந்த நிலையில் தொடர்ச்சியாக தன்னுடைய பணியை மனவுறுதியின் துணையை மட்டுமே கொண்டு மம்தா செய்துவருகிறார். கேன்சர் நோய் தாக்குதலுக்கு உள்ளான பின்பு மட்டுமே அவர் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். பெரும்பாலும் ஹீரோயினாகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் ரொம்ப சீக்கிரமாக வளர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எதைச் செய்தாலும், அதை ரொம்ப விரைவாக செய்துவிடுவேன். நான் ஒரு போராளி. எது நடந்தாலும் அதை எதிர்கொள்வேன். அச்சம் ஒன்றுதான் பிரச்சினை. ஆனால் அதையும் எதிர்கொண்டு வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை சமீபநாட்கள் கொடுத்திருக்கின்றன. பழைய மகிழ்ச்சியை மீண்டும் பெற்றுவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று கண்களில் கனவு மின்ன சொல்கிறார் மம்தா மோகன்தாஸ்.அவருடைய அப்பா சொன்ன ஒரு மந்திரம்தான் அவரைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. “மம்தா, எந்த சூழலிலும் சிரிக்க மட்டும் மறந்துவிடாதே!”

Tags:

Related posts