சில அறிவுகெட்ட முட்டாள்கள் நதிகளை இணைப்பதாக சொல்கின்றனர் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என கூறியுள்ளது. இதனை சமீபத்தில் ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார்.
இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (வியாழக்கிழமை) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
“இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல ‘இடியட்ஸ்’ பேசிக்கொண்டு அலைகின்றனர். ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கம்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான்.
ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள்?”
இவ்வாறு சீமான் பேசினார்.
ஏற்கெனவே ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை, அவருக்கு மோடி தான் இயக்குநர் என சீமான் விமர்சித்தார்.
—————
தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, அதிமுக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓப்.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர்.
———-
4 நாட்கள் கவனமாக உழைத்தால் 40 தொகுதிகளிலும் நமக்கே வெற்றி என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களமும், களச்சூழலும் நமக்கு ஆதரவாக உள்ளன. மக்களும் நமக்கு வாக்களிக்க விருப்பமாக உள்ளனர். அதை உணர்ந்து அடுத்த 4 நாட்களுக்கு கடுமையாகவும் கவனமாகவும் உழைத்தால் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நமக்கே வெற்றி. இது உறுதி” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
————-
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும்; தவசி வார்த்தை மாறமாட்டார் என்று பிரச்சாரத்தின்போது விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் உருக்கமாகத் தெரிவித்தார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அழகர்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் சிவகாசியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தலின் போது கூட்டணி என்பது வரும், போகும். ஆனால் விஜயகாந்தின் தோரணை என்றுமே மாறாது.
மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் வந்தால்தான், தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். அதிமுக ஆட்சியில் எங்கேயாவது ரவுடியிஸம் தலைவிரித்து ஆடியதா? ஆனால் திமுக ஆட்சியில் எத்தனை ரவுடிகள் இருந்தனர்? இதையெல்லாம் நீங்கள் சிந்திக்கவேண்டும்.
துளசி கூட வாசம் மாறினாலும் மாறும். ஆனால் எங்கள் தவசி வார்த்தை மாறமாட்டார். கேப்டனின் தோரணை எப்போதும் தெய்வத்தோடும் மக்களோடும்தான்” என்றார் விஜய் பிரபாகரன்.
———–
இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்று பிரச்சாரத்தில் கனிமொழி பேசியதற்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி கூடுதல் கவனம் ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் திமுக கூட்டணி சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணி சார்பில் தமிழிசையும் நேரடியாக களத்தில் உள்ளனர். இருவருமே தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
————-
நாட்டுக்கு வலிமையான அரசு தேவை. அதற்கு பிரதமராக மோடி நீடிக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும்’’ என்று திரை நட்சத்திரங்கள் 900 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திரை நட்சத்திரங்கள் பண்டிட் ஜஸ்ராஜ், விவேக் ஓபராய், ரீடா கங்குலி, சங்கர் மகாதேவன், திரிலோகி நாத் மிஸ்ரா, கொய்னா மித்ரா, அனுராதா பத்வால், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் உட்பட 900 பேர் கையெழுத்திட்டு பாஜக.வுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்தக் கூட்டறிக்கையில் திரை நட்சத்திரங்கள் கூறியிருப்பதாவது: நாட்டுக்கு இந்த நேரத்தில் வலிமையான அரசு தேவைப்படுகிறது. பயனில்லாத அரசு வேண்டாம். எனவே பாஜக.வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணிந்து வாக்களிக்க வேண்டாம். பாரபட்சம் இல்லாமல் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. நம்முன் தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற சவால்கள் நிறைந்த இந்த வேளையில் தற்போது மோடி அரசு நீடிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
ஊழல் இல்லாத சிறந்த நிர்வாகத்தைத் தந்த மத்திய அரசை கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா பார்த்துள்ளது. வளர்ச்சியை மையமிட்ட ஒரு மத்திய அரசை நாடு சந்தித்தது. எனவே, மோடி தலைமையிலான அரசு நீடிக்க பொதுமக்கள் பாஜக.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கூட்டறிகையில் 900 நட்சத்திரங்கள் கூறியுள்ளனர்.
‘பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை ஆட்சியில் இருந்து அனுப்ப வாக்களியுங்கள்’ என்று அமோல் பலேகர், நசிருதீன் ஷா, கிரிஷ் கர்னாட், உஷா கங்குலி உட்பட 600-க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் கடந்த வாரம் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதற்கு பதிலடியாக நேற்று 900 திரை நட்சத்திரங்கள், பாஜக.வுக்கு ஆதரவாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.