தமிழக அரசியல் களத்தில் அனைத்துக் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது யார்? மற்ற தேர்தல்களிலிருந்து இந்த தேர்தல் என்ன வித்யாசப்படுகிறது ஒரு அலசல்.
1950-ம் ஆண்டுகளில் இந்தியா குடியரசு ஆன பின்பு நடந்த பொதுத்தேர்தலும் அதை ஒட்டிய தேர்தல்களிலும் வாக்காளர் மனநிலை தேசபக்தி என்கிற அளவிலும், உள்ளூர் பிரமுகர்கள், தனவந்தர்கள் என்கிற அளவிலும் இருந்தது.
அதன்பின்னர் பல மாறுதல்கள் மாநில, மொழி அரசியல் என வாக்காளர்கள் மனநிலை பிரிந்தது. வாக்காளர்கள் மன நிலையை தீர்மானிப்பதில் பல புறக்காரணிகள் அவ்வப்போதைய விஞ்ஞான வளர்ச்சியை ஒட்டி அமைந்தது.
மொழி, இனம், மதம், சாதி, கலை போன்றவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியலில் வாக்குகளைப் பிரித்த வெற்றிகரமான அரசியல் தலைவர்கள் இந்தியா முழுவதும் இருந்தனர்.
இதில் மேற்கண்ட அம்சங்களில் இளம் வாக்காளர்களும் அதிகம் ஈர்க்கப்பட்டு வாக்களித்தனர். தமிழகத்தில் 1950-களில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் வாக்குகள் அதிகம். நீதிக்கட்சி, திராவிடர் கழகம் பின்னர் 1949-ம் ஆண்டு தி.க.விலிருந்து பிரிந்த திமுக என தமிழகத்துக்கான ஒரு அரசியல் அமைப்பாக திமுக தன்னை முன் நிறுத்தியது.
மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின் திமுக சந்தித்த முதல் தேர்தலில் அக்கட்சி 15 இடங்களை வென்றது. தனிநாடு கோரிக்கையைக் கைவிடவேண்டிய சூழ்நிலைக்குப் பின் 1962-ல் 50 இடங்களை திமுக வென்றது. அதன்பின்னர் எளிதில் பற்றிக்கொள்ளக்கூடிய இந்தி எதிர்ப்புக் கொள்கையை கையிலெடுத்தது திமுக.
அது அப்போதைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கூடவே கலைத்துறையினர் வரவு இளம் தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் இழுத்தது. விளைவு 1967-ல் திமுக ஆட்சி.
அதன்பின்னர் 1971-ல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் இரண்டாக உடைய இந்திரா காங்கிரஸ், பழைய காங்கிரஸ் என பிரிய இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதற்கு காரணம் அப்போது இந்திரா கையிலெடுத்த வங்கி அரசுடைமை, நிலச் சீர்திருத்தம், பங்களாதேஷ் போர் போன்றவை இளைஞர்களை ஈர்த்தது. எம்ஜிஆர் பக்கம் இருந்த இளைஞர் பட்டாளம் ஒரு காரணம்.
1972-ல் எம்ஜிஆர் வெளியேற்றப்பட திமுக அதன்பின்னர் 1976-ல் ஆட்சியை இழந்து 1987-ல் எம்ஜிஆர் மறையும் வரை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இங்கு எங்கு வருகிறார்கள் இளம் வாக்காளர்கள் என்கிற கேள்வி எழலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் வரும் பிரச்சினைகள் அதன் பின்னர் பல தேர்தல்களில் எதிரொலிக்கும்.
1960-களில் மொழிப் பிரச்சினையில் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த திமுக 1977-க்குப் பின் தொடர முடியவில்லை. காரணம் எம்ஜிஆர் எனும் சக்தி, பெண் வாக்காளர்களை அதிகம் ஈர்த்தது, அதிமுக எனும் கட்சி அடுத்தடுத்த இளம் தலைவர்களைத் தலைமைக்குக் கொண்டு வந்ததால் உயிர்ப்புடன் இருந்தது.
இந்நிலையில் இடதுசாரிகள் 1980களில் புதிய முயற்சியை மேற்கொண்டார்கள். இளைஞர், மாணவர் அமைப்பைத் தொடங்கினார்கள். இதைக் கண்ட திமுகவும் அதிமுகவும் இளைஞர்கள், மாணவர்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள்.
ஆனால் 1950-க்குப் பின் நடந்த தேர்தலைக் காட்டிலும் 1967-க்குப் பின் நடந்த தேர்தலை விட 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் முக்கியமானது. காரணம் 1980 முதல் 2016 வரை அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தலைவர்களின் ஆளுமை, மரணம், வழக்கமான கட்சிகளின் கூட்டணிகளே ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் ஆளுமை மிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைந்ததும், இரண்டு மிகப்பெரிய கட்சிகளுக்கு இரண்டு புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் சந்திக்கும் தேர்தல் இது. இவையல்லாமல் கமல், சீமான், டிடிவி தினகரன் போன்றோர் புதிய சக்தியாக நிற்கும் தேர்தல் இது.
அது மட்டும்தான் சிறப்பா? வழக்கமான கூட்டணிதானே என்று கேட்கலாம். வழக்கமான கூட்டணிதான். ஆனால் வழக்கத்தைவிட வெற்றியைத் தீர்மானிக்கும் பல புறக்காரணிகள் புதிது புதிதாக முளைத்துவிட்டன.
முதல் காரணம். வழக்கமான ஆளுமைமிக்க தலைவர்களின் கீழ் தேர்தல் பிரச்சாரம் இல்லை. இரண்டாவது முக்கியக் காரணம் 1967-க்குப் பின் நடக்கும் தேர்தலில் இளைஞர்கள் அதிகம் வாக்களிக்கும் தேர்தல் இது.
அதிகம் என்றால் எவ்வளவு என சாதாரணமாகக் கேட்க முடியாது. காரணம் மொத்த வாக்காளர்களில் 40 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 50 சதவீதம் வரை உள்ளனர்.
தமிழக மொத்த வாக்காளர்கள்:
31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே, 91 லட்சத்து, 23 ஆயிரத்து, 197 பேர் (5,92,23,197)
ஆண் வாக்காளர்கள்: 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து, 960 பேர். (2,9256,960)
பெண் வாக்காளர்கள்: 2 கோடியே, 98 லட்சத்து, 60 ஆயிரத்து, 765 பேர் (2,98,60,765)
மூன்றாம் பாலினத்தவர்: 5 ஆயிரத்து 472 பேர்.
வயது வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை
18-19 வயதுள்ள வாக்காளர்கள்: 8,98,759 பேர்
20-29 வயதுள்ள வாக்காளர்கள்: 1,18,37,274 பேர்
30-39 வயதுள்ள வாக்காளர்கள்: 1,38,55,913 பேர்
40-49 வயதுள்ள வாக்காளர்கள்: 1,27,56,864 பேர்
50-59 வயதுள்ள வாக்காளர்கள்: 95,86,247 பேர்
60-69 வயதுள்ள வாக்காளர்கள்: 61,22,460 பேர்
70-79 வயதுள்ள வாக்காளர்கள்: 30,53,480 பேர்
80+ வயதுள்ள வாக்காளர்கள்: 10,12,200 பேர்
இவர்களில் இளம் வாக்காளர்கள் என கூறுவது 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள். இவர்கள் மொத்தம் 2 கோடியே 65 லட்சத்து 91 ஆயிரத்து 946 பேர் உள்ளனர்.
இவர்கள் மொத்த வாக்காளர்களில் தீர்மானகரமான சக்தியாக உள்ளனர்.
தற்போதுள்ள நிலையில் கூட்டணி பலம், பாரம்பரிய அரசியல் கட்சிகளின் பலத்தைத் தாண்டி இளைஞர்கள் முன்னுள்ள பிரச்சினைகள், அவர்களைப் பாதிக்கும் விஷயம் போன்றவை தேர்தலில் வாக்குகளாக எதிரொலிக்கும். இவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர், இவர்கள் வாக்கு யாருக்கு என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவு இருக்கும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து.
இந்த இளம் வாக்காளர்கள் எதை வைத்து தீர்மானிப்பார்கள், அவர்கள் மன நிலை என்ன? அவர்களை ஆளுமை செலுத்தப்போகும் புறக்காரணிகள் என்ன அடுத்து பார்ப்போம்.