இப்போதைய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சில போலீஸ் அதிகாரிகளையும் சிறைக்குள் தள்ளி குஜராத்தில் தன் ஆட்சியைக் கவிழ்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி முயற்சி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோடி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பிரதமர் மோடி கூறியதாவது:
2004ம் ஆண்டு முதல் 2014 வரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி நடைபெற்றது. யார் ஆட்சி நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்கள் குஜராத் நலன்களை சிதைக்க நினைத்தனர். குஜராத் ஏதோ இந்தியாவில் இல்லாதது போல் அவர்கள் செயல்பட்டனர்.
நம் போலீஸ் அதிகாரிகள், ஏன் அமித் ஷாவையும் சிறையில் தள்ளினார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி குஜராத் அரசை உடைக்க அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்தனர்.
இப்போது குஜராத்தை மீண்டும் ஒரு முறை அழிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்போகிறோமா? நேரு குடும்பத்தினர் ஜாமீனில் இருப்பதால் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் 4 தலைமுறைகளாக அவர்கள் ஆட்சி நடத்தியுள்ளார்கள் ஆனால் இந்த குஜராத்தி, இந்த தேநீர் விற்பனையாளன் அவர்களை கோர்ட்டுக்கு அனுப்பி ஜாமீன் வாங்க வைத்துள்ளதாக கருதுகின்றனர்.
இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.