கமல் வெளியிட்ட வீடியோவில் பேசியிருக்கும் வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், ‘இந்தியன் 2’ படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.
மீண்டும் கமல் – ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் கமல். இதனால், மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று (ஏப்ரல் 16) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் கமல். அது அவருடைய கட்சி சார்ந்த விளம்பரமாக இருந்தாலும், அதில் ”நான் உசுறா நினைத்த தொழிலை விட்டுவிட்டு இங்கு வந்தால்…” என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
இந்த வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், கமல் இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என்று தெரிகிறது. அப்படியென்றால் ‘இந்தியன் 2’ படத்தைச் சுற்றி வரும் சர்ச்சைகள் அனைத்துமே உண்மையாகவே கருதப்படுகிறது.
‘இந்தியன் 2’ படத்தில் என்ன பிரச்சினை?
இப்படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் போது, கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப் போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக அவருக்கு பொருந்தவில்லை என்கிறார்கள். மேலும், அவருக்கு மேக்கப் காரணமாக அலர்ஜி ஆகியுள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
இதுவரை யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதையே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், படத்துக்கான பட்ஜெட்டை வைத்து பார்த்தால் அது மறுபடியும் திரும்ப வருமா என்ற சந்தேகம் தயாரிப்பு நிறுவனத்துக்கு எழுந்துள்ளது. மீண்டும் படத்தின் தயாரிப்புச் செலவு குறித்து இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தோல்வியடையும் பட்சத்தில் வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச முடிவு செய்திருக்கிறார்.
இந்த தருணத்தில் கமலோ ‘நான் உசுற நினைத்த தொழிலை விட்டுவிட்டேன்’ என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். ஆகவே, ‘இந்தியன் 2’ படக்குழு அதிகாரப்பூர்வமாக என்ன நடக்கிறது என்பதை எப்போது அறிவிக்கப்போகிறது என்பது தான் அனைவரது கேள்வியாகவுள்ளது.