நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், 18 சட்டமன்ற தொகுதியிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்து தயார் நிலையில் உள்ளது. அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 160 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் 1.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலில் நூறு சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால் திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.