தூத்துக்குடியில் சோதனை நடத்துவதற்கு காரணம் தோல்வி பயம்தான், தேவையற்ற அச்சுறுத்தலைத் தருகிறார்கள், வேலூர் போன்று தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த முயற்சி நடைபெறுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் பாஜக தலைவர் தமிழிசையும் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் மற்றும் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆணையத்தின் அறிவிப்புக்கு திமுக தரப்பில் கண்டனம் வெளியாகிய நிலையில், அடுத்த நடவடிக்கையாக திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் தூத்துக்குடி இல்லம், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
கனிமொழி தேர்தல் பிரச்சாரம் முடித்து இல்லம் திரும்பிய நிலையில் 6 மணிக்கு மேல் அவர் தங்கியுள்ள குறிஞ்சி நகர் வீடு, அலுவலகத்துக்கு திடீரென வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு அலுவலகத்திற்குள் அவர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னர் எப்போதோ நடந்த ஒரு சம்பவத்தில் கனிமொழிக்கு ஒரு பெண் ஆரத்தி எடுத்ததற்கு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் மீது கொடுத்த புகாரில் உடனடியாக தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கனிமொழியின் தேர்தல் முகவர் அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை இல்லத்தில் 2 முறை ரெய்டு நடத்தப்பட்டது. ஆனாலும் எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று கனிமொழி தங்கியுள்ள இல்லத்திலேயே ரெய்டு நடந்தது. சோதனையில் எத்குவும் சிக்காததால் வருமான வரித்துறையினர் புறப்பட்டுச் சென்றனர்.
ரெய்டு நடப்பதை ஒட்டி ஏராளமான திமுகவினர் அங்கு திரண்டு கோஷமிட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் சோதனை குறித்து கனிமொழி கூறியதாவது:
”தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக எங்களை பயமுறுத்துவதாக நினைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் சோதனையில் ஈடுபடுகின்றனர். எங்களது 2 மாவட்டச் செயலாளர்கள் வீடு அலுவகங்களில் சோதனை நடத்தினார்கள். அடுத்து அனிதா ராதாகிருஷ்னன் தோட்டத்தில் இரண்டுமுறை சோதனை நடத்தினார்கள்.
எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் இங்குவந்து சோதனை செய்து சென்றுள்ளார்கள். நான் நினைக்கிறேன் வேலூரில் தேர்தலை நிறுத்தியுள்ளார்கள். இங்கும் தோல்வி பயத்தால் இதுபோன்ற சோதனை நடத்தி எதுவும் கிடைத்தால் தேர்தலை நிறுத்தலாம் என்கிற நப்பாசையில் வந்து சென்றுள்ளனர்”.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.