தீ விபத்தினால் சேதமடைந்த பிரான்ஸின் பாரம்பரியச் சின்னமான நாட்ரே – டாம் தேவலாயத்தைப் புனரமைக்க 700 மில்லியன் டாலர்களை வழங்க மூன்று கோடீஸ்வர நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான 850 ஆண்டு பழமையான நாட்ரே-டாம் தேவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், அருகில் இருக்கும் தேவாலயங்களும் தொடர்ந்து மணிகளை ஒலிக்கவிட்டு உதவிக்கு வரக் கோரின. இந்தத் தீ விபத்தில தேவாலயத்தின் மரத்திலான முக்கியக் கூரை எரிந்தது.
பாரம்பரியனி நினைவுச் சின்னமான நாட்ரே – டாம் தேவலாயத்தை புனரமைக்க அந்நாட்டின் மூன்று பெரும் பணக்காரர்கள் முன் வந்துள்ளனர். எல்விஎம்ஹெச், கிரிங், எல் ஒரெல் ஆகிய மூன்று ஃபேஷன் நிறுவனங்களும் தேவலாயத்தைப் புனரமைப்பதற்காக சுமார் 700 மில்லியன் டாலர் வழங்க முன்வந்துள்ளனர்.
பிரான்ஸின் பண்டைய கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிரான்ஸில் இயங்கி வரும் பல தொழில் நிறுவனங்களும் தேவாலயத்தைப் புனரமைப்பதற்கு நிதி வழங்க முன் வந்துள்ளனர்.
உலக பாரம்பரியம்
பாரீஸ் நகரில் 850 ஆண்டு பழமையான நாட்ரே-டாம் கத்தீட்ரல் தேவாலாயம் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாட்ரே-டாம் தேவாலயம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரான்ஸில் உள்ள ரோமன் கத்தோலிக்க மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் ஆண்டுதோறும் இந்த தேவாலயத்துக்கு வருகை தருகின்றனர்.