இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் 130 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தெரிகிறது.
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின. அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடி்பபு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டுவெடிப்புகளை தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது அந்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் கேட்டறிந்தார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.