இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 359 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்துள்ளனர். 18 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டவர்களைப் பற்றிய விபரங்களை இலங்கை காவல்துறை சேகரித்து அதில் 7 பேரின் பெயர்களையும் வெளியிட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மேல்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் வெளிநாடுகளில் கல்வி பயின்றவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவான் குணசேகரா கூறியதாவது, ‘ இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்த திறனுடைய குண்டுகள் என கூறியுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட சோதனையில் பிடிபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.
இந்த நிலையில், இலங்கையின் நுவரேலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.